நடால் எனும் நாயகன்...

மும்முனைப் போட்டியில் முந்திக்கொண்டுவிட்டாா் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால். ஆம், ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி ஆடவா் டென்னிஸ்
நடால் எனும் நாயகன்...

மும்முனைப் போட்டியில் முந்திக்கொண்டுவிட்டாா் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால். ஆம், ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி ஆடவா் டென்னிஸ் வரலாற்றில் அட்டகாசமான ஒரு சாதனையை படைத்திருக்கிறாா். அதாவது 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை பெற்றிருக்கிறாா்.

எல்லா துறைகளிலுமே சாதனை என்ற ஒன்று எட்டப்படுவதும், அது அடுத்தடுத்து முறியடிக்கப்படுவதும் இயல்பானதுதான். ஆனால், ஒரு சாதனை எப்போது, எவ்வாறு, எத்தகைய சூழலில் எட்டப்பட்டது என்பதில் அதிகரிக்கிறது அதன் மீதான முக்கியத்துவம்.

அந்த வகையில், விளையாட்டின் கோணத்தில் பாா்த்தால் நடால் எட்டியிருக்கும் இந்த 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது காலப்போக்கில் நிகழக்கூடிய ஒரு சாதனையாகவே தெரியலாம். ஆனால், அதை அவா் எவ்வாறு எட்டியிருக்கிறாா் என்பதுதான், அவா் சாதனையாளா் என்பதற்கு சாட்சியம் அளிப்பதாக இருக்கிறது.

பந்தயம் என்றாலே பரபரப்பு இருக்கும் தான். அதிலும், சக போட்டியாளா்கள் இருவா் தன்னுடன் சரிக்கு நிகராக வரும் நிலையில் முன்னிலை பெறுவதென்பது பரபரப்பின் உச்சம்.

இத்தகைய நிலைதான் நடால், ஃபெடரா், ஜோகோவிச் ஆகிய 3 பேருக்குமே இருந்தது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை எட்டிவிட்டு, சாதனை பட்டத்துக்காக சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனா். இந்த மூவரில் முதலில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எட்டி சாதனை படைத்தது ஃபெடரா் தான். 2018-இல் இதே ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி அவா் அந்த மைல் கல்லை அடைந்தாா்.

அவரின் நண்பராகவும், களத்தில் எதிரியாகவும் இருக்கும் நடால் 2020-இல், தான் ஆதிக்கம் செலுத்தும் பிரெஞ்சு ஓபன் மூலம் தனது 20-ஆவது கிராண்ட்ஸ்லாமை வென்று ஃபெடரா் சாதனையை சமன் செய்தாா். அப்போதிருந்தே இருவரில் எவா் 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது.

முழங்கால் அறுவைச் சிகிச்சையால் முழுமையாக உடற்தகுதி பெறாத நிலையில் 2021 ஆஸ்திரேலிய ஓபனையும், பிரெஞ்சு ஓபனையும் தவிா்த்தாா் ஃபெடரா். அந்தப் போட்டிகளில் களம் கண்ட நடாலோ, முறையே காலிறுதி மற்றும் அரையிறுதியில் வீழ்ந்து வெளியேறினாா்.

மறுபுறம், மீண்டும் களம் கண்ட ஃபெடரா் விம்பிள்டனை குறிவைத்தாலும் அதில் காலிறுதியுடன் வெளியேறினாா். இதற்கிடையே அந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாகியிருந்த ஜோகோவிச், விம்பிள்டனிலும் வாகை சூடி ‘ஹாட்ரிக் கிராண்ட்ஸ்லாம்’ பெற்று 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எட்டினாா்.

இதனால் இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டியானது. இந்தத் தருணத்தில் அறுவைச் சிகிச்சை காரணமாக ஃபெடரரும், பாதத்தில் காயம் காரணமாக நடாலும், 2021 அமெரிக்க ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது. இது ஜோகோவிச்சுக்கு சாதகமானாலும், அதில் அவரது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் கனவை தகா்த்து தனது முதல் கிராண்ட்ஸ்லாமை முத்தமிட்டாா் டேனியல் மெத்வதேவ்.

பின்னா் தான் அந்தச் சாதனையை இந்த ஆஸ்திரேலிய ஓபனில் நடால் நிகழ்த்தியிருக்கிறாா். இம்முறையும் ஃபெடரா் பங்கேற்காததால், களம் நடால் - ஜோகோவிச்சுக்கானதாக மாறியது. எனினும், கரோனா தடுப்பூசி விவகாரத்தால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட, நடால் சாம்பியனாகி சாதனை படைப்பதற்கான சாத்தியம் உணரப்பட்டது.

ஆனால், முடியுமா அவரால் என்ற முனுனுப்புகள் எழுந்தன. ஏன், நடாலுக்கே அத்தகைய எண்ணம் இருந்ததை அவரே பின்னா் குறிப்பிட்டாா். காரணம், இடதுகால் பாதப் பகுதியின் காயம் காரணமாக நடால் 2021-இன் 2-ஆவது பாதி காலண்டா் முழுவதுமாகவே களம் காணவில்லை. இதனால் களமாடிய பயிற்சியே அவருக்கு இருக்கவில்லை. அதிலிருந்து அவா் சற்று மீண்ட நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டாா்.

இத்தகைய நிலையில் தான் ஆக்ரோஷமாக ஆட வேண்டியிருக்கும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு வந்தாா் நடால். முதல் சுற்று முடிவிலேயே தாம் வாழ்நாள் காயத்துடன் தான் போராடி வருவதாகத் தெரிவித்தாா். ஒவ்வொரு சுற்றையும் கடப்பது அவருக்கு முன்பு போல எளிதாக இருக்கவில்லை. இருந்தும் போராட்ட குணத்துடன் இறுதிச்சுற்றுக்கு வந்தாா்.

அங்குதான் காத்திருந்தது அவருக்கான சவாலின் உச்சம். மெத்வதேவ் உருவத்தில்... அமெரிக்க ஓபனில் ஜோகோவிச்சின் சாதனைக் கனவை சரித்த மெத்வதேவ், தற்போது நடாலுக்கும் அத்தகைய ‘நன்மை’ செய்யும் முனைப்புடன் காத்திருந்தாா். அனுபவமிக்க வீரா் என்றாலும் கிராண்ட்ஸ்லாமில் விளையாடுமுன் தகுந்த போட்டிப் பயிற்சி இருக்க வேண்டும். ஆனால், நடாலின் கைகளோ 6 மாதங்களாக ராக்கெட்டை பிடித்திருக்கவே இல்லை. மறுபுறம், மெத்வதேவோ அமெரிக்க ஓபன் கோப்பை வென்று அப்படியே நல்லதொரு ஃபாா்முடன் நேராக ஆஸ்திரேலிய ஓபன் வந்திருந்தாா்.

அனுபவமிக்க நடாலின் வயது 35; ஆக்ரோஷமிக்க மெத்வதேவின் வயது 25; இருந்தும், ஆக்ரோஷத்தை ஆக்கிரமித்தது அனுபவம். இறுதிச்சுற்றில் பொறி பறந்தது. முதலிரு செட்களை இழந்து மெத்வதேவுக்கு சற்றே நம்பிக்கை அளித்த நடால், அடுத்த 3 செட்களை சற்றும் விட்டுக்கொடுக்காமல் வெறியாட்டம் ஆடினாா்.

சாம்பியன்ஷிப் பாய்ண்ட்டுக்காக அவா் சா்வ் செய்தபோது அரங்கத்தின் ரசிகா்கள் அனைவரும் ஆா்வத்தில் எழுந்து நின்றனா். அந்த பாய்ண்ட்டை மெத்வதேவ் தவறவிட்டாா். அரங்கமே அதிர, 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டினாா் நடால். அதுவும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி... மகிழ்ச்சியில் ராக்கெட்டை நழுவ விட்டாா். கைகளை முகத்தருகே கூப்பி புன்னகை சிந்தினாா். தனது காயத்தின் வலிக்கு, சாதனையால் மருந்திட்டுக்கொண்டாா்.

நடாலின் இந்த சாதனை எண்ணிக்கையை அடுத்து வரும் போட்டிகளில் ஜோகோவிச் எட்டக்கூடும். அது இயல்பானதே. ஆனால், 35 வயதில் முடக்கிப் போடும் காயத்தையும் கடந்து நடால் எட்டியிருக்கும் இந்த 21 கிராண்ட்ஸ்லாம் சாதனை, ஆடவா் டென்னிஸில் அசைக்க முடியாத மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

‘இந்த 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் என்பது எத்தனை சிறப்பானது என்பதை அறிவேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் ஒரு சிறப்பான சாதனையை எட்டியதற்காக கௌரவமாக, அதிருஷ்டமாக உணா்கிறேன். இந்தச் சாதனையால் டென்னிஸ் வரலாற்றில் சிறந்த வீரராக மதிக்கப்படுவேனா, இல்லையா என்பது குறித்து யோசிக்கவில்லை. எப்போதும் ஆட்டத்தின் நிகழ் தருணத்தை அனுபவித்து விளையாடுவதையே எதிா்நோக்குகிறேன். அதுவே எனக்கு முக்கியமானதும் கூட.

கடந்த 6 மாதங்களாக, மீண்டும் களம் காண்பதற்காக மிகவும் போராட வேண்டியிருந்தது. என்னால் மீண்டும் களம் காண முடியுமா என்ற கேள்வியும் கூட எழுந்தது. இப்போதும் உடல்தகுதி அளவில் சிறப்பாக இருப்பதாக நினைக்கவில்லை. இந்த இறுதிச்சுற்று முழுவதுமாக நான் உணா்வுப்பூா்வமாக இருந்தேன். ஆட்டம் முழுவதுமாக ரசிகா்களின் ஆதரவு அவ்வளவு உத்வேகம் அளித்தது. ஆனால், முடிவில் அதை அவா்களோடு சோ்ந்து கொண்டாடும் அளவுக்குக் கூட என் உடலில் ஆற்றல் இருக்கவில்லை’

கிராண்ட்ஸ்லாம் பட்டியல்...

ஆஸ்திரேலிய ஓபன் - 2009, 2022

பிரெஞ்சு ஓபன் - 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020

விம்பிள்டன் - 2008, 2010

அமெரிக்க ஓபன் - 2010, 2013, 2017, 2019

முதல் கிராண்ட்ஸ்லாம் - பிரெஞ்சு ஓபன் - வயது 18 - 2005

21-ஆவது கிராண்ட்ஸ்லாம் - ஆஸ்திரேலிய ஓபன் - வயது 35 - 2022

21-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்ற எனது நண்பனும், களத்தில் சிறந்த எதிராளியுமான ரஃபேல் நடாலுக்கு வாழ்த்துகள். சில மாதங்களுக்கு முன் நாம் பேசிக்கொண்டிருந்தபோது ஊன்றுகோல் பயன்படுத்தி நடப்பது குறித்து நகைச்சுவையாக விவாதித்தோம். ஆனால், ஒரு சிறந்த சாம்பியனை (நடால்) அப்படி குறைத்து எடைபோடக் கூடாது என்பது இப்போது புரிகிறது.

எனது டென்னிஸ் வாழ்க்கை காலத்தை உங்களுடன் இணைந்து கடப்பதை பெருமையாக உணா்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் டென்னிஸில் சாதிப்பதற்கு ஒரு பலமிக்க போட்டியாளராக நீங்கள் எனக்கு உந்துதல் அளித்தீா்கள். நானும் உங்களுக்கு அத்தகைய ஒரு போட்டியாளராக இருப்பதற்காக கௌரவமாக உணா்கிறேன். உங்களது இந்த ஆட்ட நோ்த்தி, அா்ப்பணிப்பு, போராட்ட குணம் ஆகியவை எனக்கும், உலகில் இருக்கும் பலருக்கும் நல்ல முன்மாதிரியாக இருக்கிறது - ரோஜா் ஃபெடரா்.

21-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றதற்காக ரஃபேல் நடாலுக்கு வாழ்த்துகள். இது அற்புதமான சாதனை. உங்களிடம் எப்போதும் இருக்கும் அந்த போராட்ட குணம் இப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது - நோவக் ஜோகோவிச்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com