யு-19 உலகக் கோப்பை: பரபரப்பான முறையில் இறுதிச்சுற்றுக்கு நுழைந்த இங்கிலாந்து
By DIN | Published On : 02nd February 2022 11:15 AM | Last Updated : 02nd February 2022 11:15 AM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது இங்கிலாந்து அணி.
நார்த் சவுண்டில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 47 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற டிஎல்எஸ் முறையில் 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 138 ரன்களுக்க்கு 6 விக்கெட்டுகளை இழந்தபோதும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜார்ஜ் பெல்லும் அலெக்ஸ் ஹார்டனும் சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார்கள். ஜார்ஜ் பெல் 56, அலெக்ஸ் 53 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி 12 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது. ரெஹன் அஹமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருகட்டத்தில் 18 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்கிற பரபரப்பான நிலைமை உருவானது. ஆனால் 46-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ஆப்கானிஸ்தான் அணியால் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாகத் தகுதி பெற முடியாமல் போனது.
இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன.