பாவம் வாஷிங்டன் சுந்தர்!

சமீபகாலமாக வேறு எந்த இந்திய வீரரும் காயம் காரணமாக இவ்வளவு தடங்கல்களைச் சந்திக்கவில்லை.
பாவம் வாஷிங்டன் சுந்தர்!

தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 4 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நியாயமாக இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். இந்திய அணியில் தன் பிடியை இன்னும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நினைக்காதது எல்லாம் நடந்து ஒரு வருட கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கிவிட்டது. 

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் விளையாடினார் வாஷிங்டன் சுந்தர். பிறகு காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் பிறகு பயிற்சி ஆட்டத்தின்போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஊருக்குத் திரும்பினார். தொடர்ந்து, ஐபிஎல் போட்டியின் 2-ம் பகுதியிலும் விளையாடவில்லை. இதன் காரணமாக அவரால் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இடம்பெற முடியவில்லை. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது. காயத்திலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகினார். பெங்களூரில் நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் வாஷிங்டன் சுந்தருக்கு உடற்தகுதிச் சோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் நான்கு வாரங்கள் ஓய்வெடுத்தால் மட்டுமே காயத்திலிருந்து குணமடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடும் அளவுக்கு இன்னும் முழு உடற்தகுதியை வாஷிங்டன் சுந்தர் அடையவில்லை. உடனடியாக விளையாடவேண்டும் என அவசரப்பட வேண்டாம் என அப்போது என்.சி.ஏ.வின் தலைவராக இருந்த ராகுல் டிராவிட் கூறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் பந்துவீசுவதில் சிரமங்கள் இருந்ததால் கூடுதலாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நேஷனல் கிரிக்கெட் அகாதெமி அறிவுறுத்தியது. 

பிறகு ஒருவழியாக முழு உடற்தகுதியை அடைந்தார் வாஷிங்டன் சுந்தர். சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடியவர், 148 ரன்களும் 16 விக்கெட்டுகளும் எடுத்தார். ஒருவழியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தயாரானார். அப்போதும் அவருக்கு இன்னொரு ஆபத்து காத்திருந்தது. 

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பங்கேற்ற ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் முதலில் சேர்க்கப்பட்டார். ஆனால் கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டதால் அந்த வாய்ப்பும் பறிப்போனது. அவரால் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல முடியவில்லை. 22 வயது வீரருக்கு இத்தனைச் சிக்கல்கள் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துவிட்டு அடுத்ததாக டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான ஒருநாள், டி20 இந்திய அணிகளில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். இனிமேலாவது எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதற்காக மே.இ. தீவுகள் தொடருக்கு முன்பு மொட்டை அடித்துக்கொண்டார். 

2021 ஜனவரியில் காபா டெஸ்டில் விளையாடினார். அடுத்ததாக இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்டுகளில் விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 ஆட்டங்களிலும் விளையாடி நம்பிக்கை ஏற்படுத்தினார். அவ்வளவுதான். கடைசியாக 2021 மார்ச் 20 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், பல தடங்கல்களைத் தாண்டி மீண்டும் இந்த மாதம் தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் காயம், கரோனாவால் வீணாகிப் போனது. 

மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்தி கேப்டன் ரோஹித் சர்மாவின் பாராட்டைப் பெற்றார். மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடி 4 விக்கெட்டுகளை எடுத்த வாஷிங்டன் சுந்தர், 24, 33 என ரன்கள் எடுத்து தனது ஆல்ரவுண்டர் திறமையை மீண்டும் நிரூபித்தார்.

இனிமேலாவது இந்திய அணி விளையாடும் ஆட்டங்களில் தொடர்ந்து இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பினார்கள். சிக்கல்கள் அவ்வளவு சீக்கிரம் விலகுமா?

அடுத்ததாக மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவிருந்த வாஷிங்டன் சுந்தர், மீண்டும் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து தற்போது விலகியுள்ளார். இதையடுத்து குல்தீப் யாதவ், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காபா டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதோடு இந்திய அணியில் மூன்று வகை போட்டிகளிலும் இடம்பெறக் கூடியவராக அனைவராலும் கடந்த வருடத் தொடக்கத்தில் மெச்சப்பட்டார் வாஷிங்டன் சுந்தர். இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெறுவதற்கு உடல்நலத்துடன், இயற்கையுடன் போராடும் நிலைமையில் உள்ளார். இனி மீண்டும் உடற்தகுதியை அடைந்தாலும் இன்னொருமுறை இதுபோல முடங்கி விடக்கூடாது என்கிற அச்சம் அவருக்கு ஏற்படும். இந்தியத் தேர்வுக்குழுவுக்கும் வாஷிங்டனை வைத்து நீண்ட காலத்துக்குத் திட்டமிடுவதற்கான ஆர்வமும் குறைந்து போய்விடும். 

சமீபகாலமாக வேறு எந்த இந்திய வீரரும் காயம் காரணமாக இவ்வளவு தடங்கல்களைச் சந்திக்கவில்லை. வாஷிங்டனுக்குச் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்பமே போராட்டமாக அமைந்துவிட்டது. எல்லோருக்கும் அவர்மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது. இதெல்லாம் வாஷிங்டனுக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது, கொஞ்சமாவது அவருக்கு அதிர்ஷ்டம் அமையட்டும் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கவலையுடன் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

விளையாட்டு வீரர்களுக்குச் சவால்கள் ஆடுகளத்தில் மட்டும் இருக்காது. வெளியேயும் காத்திருக்கும். அவற்றைத் தாண்டி சென்று வெற்றியைப் பெறவேண்டிய நெருக்கடி வாஷிங்டனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியில் பங்கேற்றவர், இந்தச் சவாலையும் வெற்றி கண்டுவிடுவார் என்பதில் யாருக்குச் சந்தேகம் இருக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com