ருதுராஜின் திறமையை ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மதிப்பிட மாட்டோம்: ராகுல் டிராவிட்

3-வது டி20 ஆட்டத்தில் சரியாக விளையாடாத ருதுராஜ், அவேஷ் கானின் திறமையை இந்த ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மட்டும் மதிப்பிட மாட்டோம்...
ருதுராஜ் (கோப்புப் படம்)
ருதுராஜ் (கோப்புப் படம்)

3-வது டி20 ஆட்டத்தில் சரியாக விளையாடாத ருதுராஜ், அவேஷ் கானின் திறமையை இந்த ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மட்டும் மதிப்பிட மாட்டோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 3-0 என கைப்பற்றி முழுமையான வெற்றியை அடைந்தது. 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184/5 ரன்களைக் குவித்தது. இளம் வீரா்கள் சூரியகுமாா் யாதவ்-வெங்கடேஷ் ஐயா் இணைந்து அதிரடியாக ஆடி சிக்ஸா்கள், பவுண்டரிகளாக விளாசி 5-ம் விக்கெட்டுக்கு 91 ரன்களைச் சோ்த்தனா். சூரியகுமாா் யாதவ் 7 சிக்ஸா்கள், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 66 ரன்களை விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.  2 சிக்ஸா்கள், 4 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா் வெங்கடேஷ் ஐயா். பின்னா் ஆடிய மே.இ. தீவுகள் அணி 20 ஓவா்களில் 167/9 ரன்களை மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் 3 சிக்ஸா்களை விளாசிய ரோமாரியோ ஷெப்பா்ட் 29 ரன்களுக்கு வெளியேறினாா்.

இந்த வெற்றியினால் இந்திய அணி டி20 தொடரை 3-0 என வென்றது. ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். மேலும் ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்துடன் இணைந்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது இந்திய அணி. 2016 பிப்ரவரிக்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து இந்திய அணி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்த ருதுராஜ் கெயிக்வாட், நேற்றைய ஆட்டத்தில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அவேஷ் கான், 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்தார். 

டி20 தொடர் முடிந்த பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:

டி20 கிரிக்கெட் என்பது கடினமானது. டி20யில் ஒரு பேட்டர் எப்போதும் அதிரடியாக விளையாட வேண்டும். அவர்களை (ருதுராஜ், அவேஷ் கான்), ஒருசில ஆட்டங்களைக் கொண்டு மதிப்பிட மாட்டோம். அது சரியான வழியல்ல. தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். நன்கு விளையாடியதால் தான் இந்திய அணியில் அவர்கள் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு தொடர், ஒரு ஆட்டத்தைக் கொண்டு அவர்களுடைய திறமையை மதிப்பிட மாட்டோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com