டி20 தொடர்: இந்திய அணி கற்றதும் பெற்றதும்

வழக்கமான நடுவரிசை வீரர்களின் உதவியின்றி புதிய, அனுபவம் குறைவான வீரர்களைக் கொண்டு சாதித்துள்ளது இந்திய அணி. 
டி20 தொடர்: இந்திய அணி கற்றதும் பெற்றதும்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 3-0 என கைப்பற்றி முழுமையான வெற்றியை அடைந்தது. 

இந்திய கிரிக்கெட்டில் நிறைய குழப்பங்கள் நிகழ்ந்து வந்தாலும் ஆடுகளத்தில் தொடர் வெற்றிகள் கிடைத்து வருகின்றன. 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184/5 ரன்களைக் குவித்தது. இளம் வீரா்கள் சூரியகுமாா் யாதவ்-வெங்கடேஷ் ஐயா் இணைந்து அதிரடியாக ஆடி சிக்ஸா்கள், பவுண்டரிகளாக விளாசி 5-ம் விக்கெட்டுக்கு 91 ரன்களைச் சோ்த்தனா். சூரியகுமாா் யாதவ் 7 சிக்ஸா்கள், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 66 ரன்களை விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.  2 சிக்ஸா்கள், 4 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா் வெங்கடேஷ் ஐயா். பின்னா் ஆடிய மே.இ. தீவுகள் அணி 20 ஓவா்களில் 167/9 ரன்களை மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் 3 சிக்ஸா்களை விளாசிய ரோமாரியோ ஷெப்பா்ட் 29 ரன்களுக்கு வெளியேறினாா்.

இந்த வெற்றியினால் இந்திய அணி டி20 தொடரை 3-0 என வென்றது. ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். மேலும் ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்துடன் இணைந்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது இந்திய அணி.

இந்த டி20 தொடரில் இந்திய அணிக்குக் கிடைத்த பலன்கள் என்ன?

அசத்திய நடுவரிசை வீரர்கள்

இந்திய அணிக்குப் பல வருடங்களாகவே நடுவரிசை பெரிய சிக்கலாக இருந்து வந்தது. அந்தக் குறை இப்போது தீர்ந்துவிட்டது என்று கூட நம்பிக்கை கொள்ளலாம். 

இந்த டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர் எடுத்த ரன்கள்:

சூர்யகுமார் யாதவ் - 34*, 8, 65

ரிஷப் பந்த் - 8, 52*

வெங்கடேஷ் ஐயர் - 24*, 33, 35*

முதல் ஆட்டத்தில் இந்திய அணி நடு ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. சூர்யகுமார் யாதவும் வெங்கடேஷ் ஐயரும் ஜோடி சேர்ந்து 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.

2-வது ஆட்டத்தில் ரிஷப் பந்த் அரை சதம் எடுத்தார். வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து 39 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார். 

கடைசி ஆட்டத்தில் சூரியகுமாா் யாதவ்-வெங்கடேஷ் ஐயா் இணைந்து 5-ம் விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 91 ரன்களைச் சோ்த்தனா். அவர்களுடைய ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். 

ஜடேஜா, பாண்டியா, ஷ்ரேயஸ் ஐயர் போன்ற வழக்கமான நடுவரிசை வீரர்களின் உதவியின்றி புதிய, அனுபவம் குறைவான வீரர்களைக் கொண்டு சாதித்துள்ளது இந்திய அணி. 

2-வது டி20:

ரிஷப் பந்த் 52* (28), ஸ்டிரைக் ரேட் - 185.71
வெங்கடேஷ் ஐயர்  33 (18), ஸ்டிரைக் ரேட் - 183.33

3-வது டி20:

சூர்யகுமார் யாதவ் 65 (31), ஸ்டிரைக் ரேட் - 209.67
வெங்கடேஷ் ஐயர் 35* (19) ஸ்டிரைக் ரேட் -  184.21

இதற்கு முந்தைய தொடர்கள் வரை ஒரே ஆட்டத்தில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த 5,6 நிலை இந்திய வீரர்களில் ஒருமுறை கூட இருவரும் 180-க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டதில்லை. முதல்முறையாக இந்தத் தொடரில் இது இருமுறை நிகழ்ந்துள்ளது. 

ரவி பிஸ்னாய் - அடுத்த சூப்பர்ஸ்டார் சுழற்பந்து வீச்சாளர்

2/17, 1/30, 0/29

ஷேன் வார்னேச், ரஷித் கான் பந்துவீசும்போது எப்போது வேண்டுமானாலும் விக்கெட் விழ வாய்ப்பிருக்கும். அதுபோன்றதொரு ஆர்வத்தை உண்டாக்குகிறது ரவி பிஷ்னாயின் பந்துவீச்சு.

3 ஆட்டங்களில் 3 விக்கெட் எடுத்துள்ளார் ரவி பிஷ்னாய். எகானமி - 6.33. சிக்ஸர் மன்னர்கள் உள்ள மே.இ. தீவுகள் அணிக்கு எதிராகப் பந்துவீசி இந்த எகானமியை அடைவது அவ்வளவு சுலபமல்ல. முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 

அதேபோல இந்தத் தொடரில் இரு லெக் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி தனது திட்டத்தில் வெற்றி கண்டுள்ளது இந்திய அணி. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா நிச்சயம் விளையாடுவார். அப்போது சஹால், பிஷ்னாய் ஆகிய இருவரில் யாரை இந்திய அணி தேர்வு செய்யப்போகிறது?

கடைசி ஓவர்களில் அசத்திய இந்திய அணி

பும்ரா இல்லையென்றாலும் கவலையில்லை, கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீச முடியும் என நிரூபித்துள்ளார்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்.

2-வது டி20 ஆட்டத்தில் பூரனும் பவலும் 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்கள். 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை. 19-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் 4 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். புவனேஸ்வர் குமாரின் காலம் முடிந்துவிட்டதா எனப் பலரும் அச்சப்பட்ட நிலையில் இந்தத் தொடரில் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

3-வது டி20 ஆட்டத்தில் 18 பந்துகளில் 37 ரன்கள் தேவை மே.இ. தீவுகள் அணிக்கு. நான்கு விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஹர்ஷல் படேலும் ஷர்துல் தாக்குரும் அந்த மூன்று ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை வழங்கினார்கள். 

ஹர்ஷல் படேல் 3 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அடுத்தமுறை பும்ரா இந்திய டி20 அணியில் விளையாடும்போது அவரும் ஹர்ஷல் படேலும் புவனேஸ்வர் குமாரும் கடைசி ஓவர்களை வீசுவார்கள். எதிரணியின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். 

ரோஹித் சர்மா தலைமைப் பண்பு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர், மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் என இதுவரை ரோஹித் சர்மாவுக்குத் தோல்விகளே இல்லை. எல்லாமே முழு வெற்றிகள். சரியான முடிவுகளை எடுப்பதும் வீரர்களுக்குச் சுதந்திரம் வழங்குவதும் அவருடைய தலைமைப்பண்புக்கு சான்றாக உள்ளன. விராட் கோலி போல ரோஹித் சர்மாவும் நிறைய சாதிப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com