நெ. 1 வீரர் கார்ல்சனைத் தோற்கடித்த 16 வயது பிரக்ஞானந்தா
By DIN | Published On : 21st February 2022 03:05 PM | Last Updated : 21st February 2022 03:16 PM | அ+அ அ- |

பிரக்ஞானந்தா - கார்ல்சன்
தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் இதற்கு முன்பு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்தார் கார்ல்சன். ஆனால், பிரக்ஞானந்தா, ஏழு சுற்றுகளில் விளையாடி ஒரு வெற்றி, நான்கு தோல்விகள், இரண்டு டிராக்கள் எனச் சுமாராகவே விளையாடியிருந்தார். கடைசி மூன்று ஆட்டங்களிலும் அவருக்குத் தோல்விகளே கிடைத்தன.
எனினும் கார்ல்சனுக்கு எதிராக கருப்பு நிறக் காய்களுடன் அற்புதமாக விளையாடி 39 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்றுள்ள முதல் வெற்றி இது.
இந்த வெற்றியினால் எட்டு சுற்றுகளின் முடிவில் எட்டு புள்ளிகளுடன் 12-ம் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 13 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார் கார்ல்சன்.
இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகின்றன.