இந்திய அணியின் கேப்டன்: ஏழு டெஸ்டுகளில் நிலைமையை மாற்றிய கே.எல். ராகுல்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் எனக் கால் வைத்த இடங்களில் எல்லாம் ராகுலுக்குச் சறுக்கியதால்...
இந்திய அணியின் கேப்டன்: ஏழு டெஸ்டுகளில் நிலைமையை மாற்றிய கே.எல். ராகுல்

ஜொகன்னஸ்பர்க் டெஸ்டில் காயம் காரணமாக கோலி விலக, இந்திய அணியின் கேப்டனாகக் களமிறங்கியுள்ளார் கே.எல். ராகுல். சில மாதங்களுக்கு முன்பு யாரால் இதைக் கற்பனை செய்திருக்க முடியும்?

2021-ல் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகளில் விளையாடி 1-3 எனத் தோற்றது. அந்தத் தொடரில் கே.எல். ராகுல் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை. 

ஷுப்மன் கில்லும் ரோஹித் சர்மாவும் தான் அனைத்து டெஸ்டுகளிலும் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். டெஸ்ட் அணியில் கே.எல். ராகுல் இடம்பெற்றிருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இங்கிலாந்தில் இரண்டு வருடங்கள் கழித்து இந்திய அணியில் விளையாட கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கிடைத்தது. 4 டெஸ்டுகளில் ஒரு லார்ட்ஸ் சதம், 1 அரை சதம் உள்பட 315 ரன்கள் எடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்த முக்கியப் பங்கு வகித்தார். அதற்கு முன்பு கடைசியாக 2018 செப்டம்பரில் இங்கிலாந்து ஓவலில் சதமடித்தார் ராகுல். அதே இங்கிலாந்து மண்ணில் சதமடித்து தன்னுடைய வருகையை வெளிப்படுத்தினார். 

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலும் ராகுலுக்கு ஒரு டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்காது. பயிற்சி ஆட்டத்தில் ராகுல் சதமடித்தார். ஆனாலும் ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தான் தொடக்க வீரர்கள் என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தது. எனினும் பயிற்சியின்போது மயங்க் அகர்வால் காயமடைந்ததால் முதல் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு ராகுலுக்குக் கிடைத்தது. 

2018, 2019-ல் 15 டெஸ்டுகளில் சுமாராக விளையாடி 22.23 ரன்கள் மட்டும் சராசரி வைத்து இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினார் ராகுல். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் எனக் கால் வைத்த இடங்களில் எல்லாம் ராகுலுக்குச் சறுக்கியதால் வேறு வழியின்றி அணியிலிருந்து அவரை நீக்கினார்கள். இதன்பிறகு இந்திய வெள்ளைப் பந்து அணியில் ராகுலுக்கு நிரந்தர இடம் கிடைத்தது. ஐபிஎல் போட்டியிலும் தொடந்து ரன்கள் குவித்தார். இதனால் பிசிசிஐயின் முழு நம்பிக்கையைப் பெற்றார். டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்தாலும் அவரை நடுவரிசையில் விளையாடவே கோலி நினைத்தார். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பிருத்வி ஷா, எனத் தொடக்க வீரர்களுக்கான போட்டியில் பலர் இருப்பதால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. 

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு ஷுப்மன் கில் செல்லவில்லை. இலங்கையில் வெள்ளைப் பந்து தொடரில் விளையாடச் சென்று மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பிய பிருத்வி ஷாவால் கரோனா விதிமுறைகளால் முதல் டெஸ்டில் விளையாட முடியாது. மயங்க் அகர்வாலுக்குக் காயம். இப்படித்தான் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பினார் ராகுல். ஆட்டமுறையை மாற்றியதால் ரன்கள் மட்டுமல்ல கேப்டன் பதவியும் அவர் வசம் வந்துள்ளது. கோலி இல்லாத சமயத்தில் தான் இந்தப் பதவி என்றாலும் இதுவே எவ்வளவு பெரிய பாக்கியம்! இங்கிலாந்தில் இப்படியொரு தருணம் அமையும் என யாராவது எண்ணியிருக்க முடியுமா?

இங்கிலாந்தில் ரன்கள் குவித்த ராகுல், செஞ்சுரியனில் சதமடித்தார். அந்தச் சதம் தான் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனை. இதுவரை தான் விளையாடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் என 6 நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்துள்ளார் ராகுல். 

இந்தியா கடைசியாக விளையாடிய 7 டெஸ்டுகளுக்கு முன்பு ராகுலுக்கு அணியில் இடமில்லை. ஆனால் தனக்குக் கிடைத்த 5 டெஸ்டுகளில் திறமையை நிரூபித்ததான் இன்று இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாகியுள்ளார். இன்னும் பல அற்புதமான தருணங்களை இந்திய அணிக்கு கே.எல். ராகுல் தரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com