இந்திய அணியை மிரட்டிய கீகன் பீட்டர்சன், தெ.ஆ. ஒருநாள் அணியில் இடம்பெறாதது ஏன்?

தெ.ஆ. ஒருநாள் அணி ஜனவரி 2 அன்று அறிவிக்கப்பட்டது. அதுவரை முதல் டெஸ்ட் மட்டுமே முடிந்திருந்தது.
இந்திய அணியை மிரட்டிய கீகன் பீட்டர்சன், தெ.ஆ. ஒருநாள் அணியில் இடம்பெறாதது ஏன்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. கடைசி டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்த கீகன் பீட்டர்சன், ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.

டெஸ்ட் தொடரில் 15, 17, 62, 28, 72, 82 எனச் சிறப்பாக விளையாடிய கீகன் பீட்டர்சன், தெ.ஆ. ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது.

பீட்டர்சன் ஒருநாள் அணியில் இடம்பெறாதது ஏன்?

28 வயது பீட்டர்சன் இப்போதுதான் தெ.ஆ. அணிக்குள் நுழைந்திருக்கிறார். இதுவரை 5 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் தான் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைத்துள்ளது. அவருடைய திறமையை அனைவரும் அறிந்ததும் இப்போதுதான். 

66 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடியுள்ள பீட்டர்சன், 3 சதங்களுடன் 1780 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 32.96. ஸ்டிரைக் ரேட் - 71.91. 

தற்போது வரை டெஸ்ட் வீரராகவே பார்க்கப்படுகிறார் பீட்டர்சன். மேலும் தெ.ஆ. ஒருநாள் அணி ஜனவரி 2 அன்று அறிவிக்கப்பட்டது. அதுவரை முதல் டெஸ்ட் மட்டுமே முடிந்திருந்தது. அதில் பீட்டர்சன் சரியாக விளையாடவில்லை. ஒருநாள் அணி அறிவிக்கப்பட்ட பிறகே 2-வது மற்றும் 3-வது டெஸ்டுகள் நடைபெற்றன. எனவே பீட்டர்சனின் முழு திறமையும் வெளிப்படும் முன்பே தெ.ஆ. ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அணியில் ஏராளமான பேட்டர்கள் உள்ளதால் இப்போதைக்கு பீட்டர்சனுக்கு இடமில்லை. 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தெ.ஆ. பேட்டர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தேர்வுக்குழுவினர் கவனிப்பார்கள். பீட்டர்சனை அணிக்குள் நுழைத்தால் பலன் இருக்கும் என்கிற எண்ணம் தோன்றினால் நிச்சயமாக ஒருநாள் அணியில் பீட்டர்சன் தேர்வாவார். டெஸ்ட் அணிக்குப் புது ரத்தம் பாய்ச்சிய பீட்டர்சன், ஒருநாள் அணிக்கும் தேர்வாவதற்கு நீண்ட நாள் ஆகாது என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது. 

டெஸ்டில் மட்டுமல்லாமல் ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் பீட்டர்சனால் திறமையை வெளிப்படுத்த முடியும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com