கங்குலி, டிராவிட் உலகக் கோப்பையை வென்றதில்லை: ரவி சாஸ்திரி
By DIN | Published On : 25th January 2022 12:18 PM | Last Updated : 25th January 2022 12:18 PM | அ+அ அ- |

ஒரு வீரரின் திறமையை உலகக் கோப்பையின் முடிவுகளைக் கண்டு மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோற்றது. இதையடுத்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முக்கிய வீரர்களான கங்குலி, டிராவிட், அனில் கும்ப்ளே, லக்ஷ்மண், ரோஹித் சர்மா ஆகியோர் இதுவரை உலகக் கோப்பைப் போட்டியை வென்றதில்லை. இதற்காக அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தமில்லை. கபில் தேவ், தோனி என உலகக் கோப்பையை வென்ற இரு கேப்டன்கள் தான் நம்மிடம் உள்ளார்கள். முதல் உலகக் கோப்பையை வெல்ல சச்சின் டெண்டுல்கர் 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது. உலகக் கோப்பையைக் கொண்டு ஒரு வீரரை மதிப்பிடக் கூடாது. எப்படி விளையாடுகிறார், எவ்வளவு காலம், எந்த முறையில் விளையாடுகிறார் என்பதை வைத்தே ஒரு வீரரை மதிப்பிட வேண்டும் என்றார்.
சாஸ்திரி தனது பேட்டியில் ரோஹித் சர்மாவின் பெயரைக் குறிப்பிட்டாலும் அவர் 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்று 4 ஆட்டங்களில் விளையாடினார். இறுதிச்சுற்று ஆட்டத்தில் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா.