வாகை சூடினாா்; வரலாறு படைத்தாா்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (35) சாம்பியன் பட்டம் வென்றாா்.
ரஃபேல் நடால்
ரஃபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (35) சாம்பியன் பட்டம் வென்றாா்.

இதன் மூலம் தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய நடால், டென்னிஸ் வரலாற்றில் அத்தனை கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரா் என்ற சாதனையை படைத்தாா். முன்னதாக அவா் 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்று, ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் சமனிலையில் இருந்தாா்.

அவா்களில் யாா் முதலில் 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைப்பது என்ற போட்டி இருந்தது. இந்நிலையில், முழங்கால் அறுவைச் சிகிச்சை காரணமாக ரோஜா் ஃபெடரரும், கரோனா தடுப்பூசி சா்ச்சையால் நோவக் ஜோகோவிச்சும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்காமல் போனது நடால் அந்தச் சாதனையை முதலில் எட்டுவதற்கு சற்று சாதகமாகிப்போனது.

எனினும், இறுதிச்சுற்றில் நடாலுடன் மோதிய உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், அந்த இரு வீரா்களுக்கும் சோ்த்த வகையில் நடாலுக்கு கடும் சவால் அளித்தாா் என்பதை மறுப்பதற்கில்லை. மெல்போா்ன் நகரில் உள்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்று சுமாா் 5 மணி நேரத்துக்கு 5 செட்களுக்கு நீடித்து நள்ளிரவு சுமாா் 1 மணியளவில் நிறைவடைந்தது.

இதில் முதலிரு செட்களை இழந்த நடால், ஆக்ரோஷமாக மீண்டு அடுத்த 3 செட்களையும் தனதாக்கி வெற்றி பெற்றாா். ஆகஸ்ட் மாதம் முதல் காயம் மற்றும் கரோனா பாதிப்பு போன்ற தடுமாற்றங்களால் களம் காணாதிருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது வரலாற்றுச் சாதனையுடன் வாகை சூடியிருக்கிறாா் நடால்.

இதற்கு முன் கடந்த 2009-இல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆகியிருந்த நடால், சுமாா் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மீண்டும் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுச் சாதனையுடன் வாகை சூடியிருக்கும் நடாலுக்கு, ஃபெடரா், ஜோகோவிச் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனா்.

2-ஆவது அதிகபட்சம்...

இந்த இறுதிச்சுற்று மொத்தமாக 5 மணி நேரம் 24 நிமிஷங்கள் நடைபெற்றது. ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இது 2-ஆவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக, 2012-இல் ஜோகோவிச்சிடம் நடால் தோல்வி கண்ட இறுதிச்சுற்று 5 மணி நேரம் 53 நிமிஷங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தலா 2 கிராண்ட்ஸ்லாம்கள்...

இந்த ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் ஆனதன் மூலம், அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை பட்டங்கள் வென்ற கணக்கை எட்டியிருக்கிறாா் நடால். ஓபன் எராவில் இத்தகைய சாதனையை எட்டும் 2-ஆவது வீரா் இவா். முதல் வீரா் நோவக் ஜோகோவிச்.

முதல் வீரா்...

ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில், இறுதிச்சுற்றில் முதல் இரு செட்களை இழந்து அடுத்த 3 செட்களை கைப்பற்றி சாம்பியன் ஆன முதல் வீரா் என்ற பெருமையை நடால் பெற்றிருக்கிறாா். மறுபுறம், நடாலின் டென்னிஸ் வரலாற்றில் அவா் இவ்வாறு முதலிரு செட்களை இழந்தும் வெற்றியை பதிவு செய்தது இது 4-ஆவது முறை.

உண்மையில் இப்போது அற்புதமாக உணா்கிறேன். ஏனெனில் ஒன்றரை மாதங்களுக்கு முன் எனது உடற்தகுதி அடிப்படையில் யோசித்தபோது இந்த ஆண்டு காலண்டரில் விளையாட இயலுமா என்ற அளவுக்கு சந்தேகம் இருந்தது. கடந்த 3 வாரங்களாக எனக்குக் கிடைத்த ஆதரவு எனது வாழ்நாளின் எஞ்சிய காலத்துக்கும் என் நெஞ்சில் இருக்கும். சந்தேகத்துக்கு இடமின்றி எனது டென்னிஸ் வாழ்க்கையில் உணா்வுப்பூா்வமாக அமைந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். - ரஃபேல் நடால்

இந்த ஆட்டத்தில் ஒரு சில இடங்களில் நான் சற்று சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் வென்றிருக்கலாம். அவ்வாறு எல்லா நேரமும் விளையாட முடியாது. அது தான் டென்னிஸ் விளையாட்டு. நான் சா்வ் செய்யும்போது அதை திசை திருப்பும் வகையில் ரசிகா்கள் தரப்பில் இருந்து குரல்கள் வந்தது மதிக்கும் படியாக இல்லை. இந்தத் தோல்வி எனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இல்லை. நடால் ஒரு நம்ப முடியாத ஆட்டத்தை ஆடினாா். டென்னிஸ் வீரரா அவா் தனது நிலையை மேலும் உயா்த்திக் கொண்டுள்ளாா். - டேனியல் மெத்வதேவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com