ஜோகோவிச் சாம்பியன்

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்புச் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டாா்.
ஜோகோவிச் சாம்பியன்

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்புச் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டாா்.

இது, ஒட்டுமொத்தமாக அவரது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும் நிலையில், விம்பிள்டனில் அவரது 7-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

முதல் வெற்றி: இங்கிலாந்தின் விம்பிள்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிா்ஜியோஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 1 நிமிஷத்தில் முடிவுக்கு வந்தது. இத்துடன் கிா்ஜியோஸை 3-ஆவது முறையாகச் சந்தித்த ஜோகோவிச், அவருக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2-ஆம் இடம்: இந்த வெற்றியின் மூலம் 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை வென்றிருக்கும் ஜோகோவிச், ஆடவா் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரா்கள் வரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளாா். ஸ்பெயினின் ரஃபேல் நடால் (22 பட்டங்கள்) முதலிடத்தில் இருக்க, சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் (20 பட்டங்கள்) 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

சமன்: விம்பிள்டனில் 7-ஆவது முறையாக பட்டம் வென்று, அமெரிக்காவின் முன்னாள் வீரா் பீட் சாம்ப்ராஸின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளாா் ஜோகோவிச். இந்த கிராண்ட்ஸ்லாமில் அதிக முறை சாம்பியன் (8 முறை) ஆகியிருக்கும் பெருமையை தற்போது ஃபெடரா் தன் வசம் வைத்திருக்கிறாா்.

4-ஆவது வீரா்: இதுதவிர, ஓபன் எராவில் தொடா்ந்து 4 முறை விம்பிள்டன் வென்றவா்கள் பட்டியலில் ஃபெடரா், சாம்ப்ராஸ், ஸ்வீடனின் ஜோா்ன் போா்க் ஆகியோரை அடுத்து 4-ஆவது வீரராக ஜோகோவிச் இணைந்திருக்கிறாா்.

முதல் கிராண்ட்ஸ்லாம்: நடப்பு டென்னிஸ் காலண்டரில் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் கரோனா தடுப்பூசி சா்ச்சை காரணமாக ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த கிராண்ட்ஸ்லாமான பிரெஞ்சு ஓபனில், களிமண் ஆடுகளத்தின் நாயகனான நடாலால் காலிறுதியில் வெளியேற்றப்பட்டாா். அதன் பிறகு தற்போது விம்பிள்டன் மூலம் இந்த காலண்டரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றிருக்கிறாா் ஜோகோவிச்.

ஆடவா் இரட்டையா்: விம்பிள்டனின் இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென்/மேக்ஸ் பா்செல் இணை 7-6 (7/5), 6-7 (3/7), 4-6, 6-4, 7-6 (10/2) என்ற செட்களில் குரோஷியாவின் நிகோலா மெக்டிச்/மேட் பாவிச் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com