தமிழக வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி
By DIN | Published On : 20th July 2022 01:31 PM | Last Updated : 20th July 2022 01:31 PM | அ+அ அ- |

தமிழகத் தடகள வீராங்கனை தனலட்சுமி, ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. இம்முறை இங்கிலாந்தின் பிர்மிங்கமில் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 36 போ் அடங்கிய இந்தியத் தடகள அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 100 மீ மற்றும் 4*100 மீ தொடா் ஓட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி தேர்வாகியிருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் 4*400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காகத் தேர்வானார்.
இந்நிலையில் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார் 24 வயது தனலட்சுமி. இதையடுத்து காமன்வெல்த் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையை முறியடித்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஸ்வா்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.