அபார வெற்றியுடன் இலங்கை டெஸ்டில் வரலாறு படைத்த பாகிஸ்தான்

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 112/8 என்கிற நிலையில் இருந்தது. எனினும் அற்புதமாக விளையாடி...
அப்துல்லா சஃபிக் (கோப்புப் படம்)
அப்துல்லா சஃபிக் (கோப்புப் படம்)

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது பாகிஸ்தான்.

இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களும் பாகிஸ்தான் அணி 218 ரன்களும் எடுத்தன. இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சண்டிமல் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி, 4-ம் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அப்துல்லா சஃபிக் 112, முகமது ரிஸ்வான் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்றைய ஆட்டத்தின் முதல் பகுதியில் இலங்கை வீரர்கள் கடுமையாக முயற்சி செய்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்வான் 40 ரன்களிலும் சல்மான் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 5-ம் நாள் உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் அப்துல்லா சஃபிக் 139 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

உணவு இடைவேளைக்குப் பிறகு உடனடியாக ஹசன் அலியின் விக்கெட்டை வீழ்த்தியது இலங்கை. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான முக்கிய பொறுப்பு இளம் வீரர் அப்துல்லா சஃபிக் மீது விழுந்தது. 122-வது ஓவரில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். அடுத்த ஓவரில் தனஞ்ஜெயா பந்துவீச்சில் அப்துல்லா சஃபிக் அளித்த கேட்சை நழுவவிட்டார் இலங்கை ஃபீல்டர் ரஜிதா. இதையடுத்து 127.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது பாகிஸ்தான் அணி. அப்துல்லா சஃபிக் 160, முகமது நவாஸ் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இலங்கையின் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

டெஸ்டில் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிய 2-வது அதிகபட்ச இலக்கு இது. காலேவில் முதல்முறையாக ஓர் அணி 4-வது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 112/8 என்கிற நிலையில் இருந்தது. எனினும் அற்புதமாக விளையாடி மீண்டு வந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com