பணம் எனக்கு முக்கியமே அல்ல: ரூ. 80 கோடி சொத்து கொண்ட மைக் டைசன்
By DIN | Published On : 21st July 2022 03:55 PM | Last Updated : 21st July 2022 03:55 PM | அ+அ அ- |

பணம் பாதுகாப்பு அளிக்கும் என்பது தவறான எண்ணம் என்று பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கூறியுள்ளார்.
1985 முதல் 2005 வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக இருந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த மைக் டைசன். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். எதிராளியை நாக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்றவர். இவரைத் தெரியாத விளையாட்டு ரசிகர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்குப் புகழ்பெற்றவர். 58 தொழில்முறை ஆட்டங்களில் 50-ல் வெற்றியை ருசித்தவர் டைசன். 2005-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் மைக் டைசன் கூறியதாவது:
எல்லோரும் ஒருநாள் இறந்து விடத்தான் போகிறோம். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது கரும்புள்ளிகள் தென்பட்டன. காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது என நினைத்தேன்.
பணம் எனக்கு முக்கியமே அல்ல. பணம் தங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். பணம் பாதுகாப்பு அளிக்கும் என்பது தவறான எண்ணம். ஒன்றும் நடக்காது என நம்புகிறீர்கள். வங்கிகள் வீழ்ச்சியடையாது என எண்ணுவீர்கள். பணம் இருந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது என எண்ணுவீர்கள். அது உண்மையல்ல. எனவே தான் பணம் பாதுகாப்பை அளிக்கும் என்பது தவறான எண்ணம். நிறைய பணம் இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என என் மனைவி கூறுவார். என்ன பாதுகாப்பு? எனக்குத் தெரியவில்லை. வங்கியில் பணம் செலுத்தினால், ஒவ்வொரு வாரமும் காசோலை வரும். அதை வைத்து மீதமுள்ள வாழ்க்கையை வாழலாம். இதுவா பாதுகாப்பு? அதனால் உங்களுக்கு வியாதி எதுவும் வராதா? காரில் மோதி உங்களுக்கு விபத்து ஏற்படாதா? பாலத்திலிருந்து குதிக்க மாட்டீர்களா? இந்தப் பாதிப்புகளில் இருந்து பணம் உங்களைக் காப்பாற்றுமா எனக் கூறியுள்ளார்.
மைக் டைசன் மூன்று திருமணங்கள் செய்துள்ளார். முதல் இரு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. டைசனுக்கு 8 குழந்தைகள். தற்போது டைசனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 80 கோடி என அறியப்படுகிறது (10 மில்லியன் டாலர்).