97 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்: முதல் நாளில் இந்தியா 357/6 ரன்கள் குவிப்பு

97 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
97 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்: முதல் நாளில் இந்தியா 357/6 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் தொடங்கியுள்ளது.

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளார்கள். ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, இந்திய கேப்டனாக அறிமுகமாகும் டெஸ்ட் இது. கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. 

தொடக்க வீரர்களான ரோஹித், மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்கத்தில் நன்கு விளையாடினாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மயங்க் அகர்வால் 33, ரோஹித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் களமிறங்கினார் கோலி. 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. விஹாரி 30, கோலி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய விஹாரி, 93 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதனால் இனி வரும் டெஸ்டுகளில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று 38 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இந்த இலக்கை எட்டிய 6-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

100-வது டெஸ்டில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் எதிர்பாராதவிதமாக எம்புல்தெனியா பந்துவீச்சில் போல்ட் ஆனார் விராட் கோலி. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 5-ம் நிலை வீரராக ரிஷப் பந்த் களமிறங்கினார்.  

அரை சதமெடுத்த விஹாரி, பிறகு 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களைப் போல ஷ்ரேயஸ் ஐயரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 27 ரன்களில் தனஞ்ஜெயா டி சில்வாவின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 228 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்தும் ஜடேஜாவும் பொறுப்புடன் விளையாடினார்கள். 73 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரிஷப் பந்த். அரை சதமெடுத்த பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பந்த் - ஜடேஜா கூட்டணி 108 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்கள். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், 97 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதமெடுக்காததால் மிகவும் சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன்பிறகு ஜடேஜாவும் அஸ்வினும் மேலும் விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 85 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com