ரஞ்சி கோப்பை: முதல் இன்னிங்ஸில் மீண்டும் முன்னிலை பெற்ற தமிழகம்

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சதமடித்த இந்திரஜித்
சதமடித்த இந்திரஜித்

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் முதல் 4 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - சாய் கிஷோர் ஜோடி தமிழக அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் வரை அற்புதமாக விளையாடியது. இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது சதமெடுத்து அசத்தினார் இந்திரஜித். அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாய் கிஷோர் 81 ரன்களிலும் ஷாருக் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது தமிழக அணி.

முதல் நாள் முடிவில் தமிழக அணி, 72 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் 10, முகமது 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜார்க்கண்ட் அணியின் ராகுல் சுக்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 74.3 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உட்கர்ஷ் சிங் 52, கேப்டன் செளரப் திவாரி 58 ரன்கள் எடுத்தார்கள். எம். சித்தார்த் 4 விக்கெட்டுகளும் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்த வருடம் விளையாடிய மூன்று ரஞ்சி கோப்பை ஆட்டங்களிலும் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளதால் அடுத்த இரு நாள்களும் தமிழக அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com