சூரத்தில் பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே அணி (விடியோ)

சிஎஸ்கே வீரர்கள் 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சூரத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்...
சூரத்தில் பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே அணி (விடியோ)

சூரத்தில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள் சிஎஸ்கே வீரர்கள்.

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். மும்பைக்கும் சூரத்துக்கும் சுமார் 275 கி.மீ. என்பதால் அங்கிருந்து விரைவாகச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். மேலும் மஹாராஷ்டிரத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் அதே சூழல் சூரத்திலும் உள்ளதாலும் இந்நகரில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். சென்னை ஆடுகளங்களுக்கும் மும்பை, புணே ஆடுகளங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதால் மும்பை ஆடுகளத்தின் தன்மையைக் கொண்ட சூரத் ஆடுகளங்களில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்கிற முக்கியக் காரணத்துக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அவரவர் ஊர்களிலிருந்து வந்துள்ள சிஎஸ்கே வீரர்கள் 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சூரத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதுகுறித்த படங்கள், விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. தோனி, ராயுடு, கே.எம். ஆசிஃப், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் பயிற்சியில் பங்கேற்றுள்ளார்கள். மார்ச் 12 அன்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சூரத்துக்கு வருகை தரவுள்ளார். 

மார்ச் 26 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com