மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்: ரூட் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து
By DIN | Published On : 17th March 2022 11:04 AM | Last Updated : 17th March 2022 11:04 AM | அ+அ அ- |

ஜோ ரூட்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 89.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மேத்யூ ஃபிஷர், சகிப் முகமது ஆகியோர் அறிமுகமானார்கள்.
ரன் எதுவும் எடுக்காமல் ஸாக் கிராவ்லியும் 30 ரன்களில் அலெக்ஸ் லீஸும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் டான் லாரன்ஸும் கவனமுடன் விளையாடி பெரிய கூட்டணி அமைத்தார்கள். விரைவாக ரன் எடுத்த லாரன்ஸ் 62 பந்துகளில் அரை சதமெடுத்தார். இன்னொரு பக்கம், ரூட் நிதானமாக விளையாடினார். 199 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ரூட். இது அவருடைய 25-வது டெஸ்ட் சதம். 2021 முதல் விளையாடிய 19 டெஸ்டுகளில் 8 சதங்கள் அடித்துள்ளார். முதல் நாளின் கடைசி ஓவரில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் லாரன்ஸ். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 271 பந்துகளில் 164 ரன்கள் எடுத்தார்கள்.
இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 89.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 119 ரன்களுடன் களத்தில் உள்ளார்.