சிலம்பப் போட்டி: தூத்துக்குடி வெற்றி
By DIN | Published On : 17th March 2022 03:44 AM | Last Updated : 17th March 2022 03:44 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்றது.
சிலம்பம் சவுத் இந்தியா சார்பில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உள்விளையாட்டரங்கில் 12-ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வயது, தனித்திறமை, தொடுதல், ஆயுதப் பிரயோகம் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட சிலம்பம் அணியினருக்கு சிலம்பம் சவுத் இந்தியா தலைவர் சண்முகசுந்தரம் சிவந்தி ஆதித்தனார் நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினார்.
முன்னதாக போட்டிக்கு கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை சிலம்பம் சவுத் இந்தியா செயலர் டென்னிசன் செய்திருந்தார்.