அயர்லாந்து டி20 தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராகும் விவிஎஸ் லக்ஷ்மண்
By DIN | Published On : 18th May 2022 05:59 PM | Last Updated : 18th May 2022 06:00 PM | அ+அ அ- |

இந்திய அணியின் அயர்லாந்துச் சுற்றுப்பயணத்தில் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இந்த வருடம் நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் டெஸ்ட் வீரர்களால் பங்கேற்க முடியாது. இதையடுத்து அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியின் இயக்குநராக லக்ஷ்மண் தற்போது பணியாற்றி வருகிறார்.