தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த ஜெகதீசன்: ஹரியாணாவை எளிதாக வென்ற தமிழ்நாடு!

தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.
தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த ஜெகதீசன்: ஹரியாணாவை எளிதாக வென்ற தமிழ்நாடு!

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் ஹரியாணாவை 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி.

அலூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதின. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தார்கள். சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார். கடந்த மூன்று ஆட்டங்களிலும் சதமடித்த ஜெகதீசன் இன்றும் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார். அவர் 123 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த 4-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்துள்ளார்கள். 

தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் தெவாதியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

கடினமான இலக்கை எதிர்கொள்ள முடியாமல் ஹரியாணா அணி, 28.3 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தெவாதியா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். பாபா அபரஜித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com