கடைசி 10 ஓவர்களில்...: வங்கதேச அணியின் தோல்விகள் பற்றி எஸ். ஸ்ரீராம்
By DIN | Published On : 13th October 2022 05:47 PM | Last Updated : 13th October 2022 05:47 PM | அ+அ அ- |

ஷகிப் அல் ஹசன் (கோப்புப் படம்)
டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற கடைசி 10 ஓவர்களில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று வங்கதேச அணியின் ஆலோசகர் எஸ். ஸ்ரீராம் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வங்கதேச அணி தோல்வியடைந்துள்ளது. இன்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. லிடன் தாஸ் 69, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 68 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 69, பாபர் ஆஸம் 55 ரன்கள் எடுத்தார்கள்.
வங்கதேச அணியின் ஆலோசகராக உள்ள தமிழக முன்னாள் வீரர் எஸ். ஸ்ரீராம், இந்தத் தோல்விகள் பற்றி கூறியதாவது:
வங்கதேச அணி வெற்றி பெற அனைத்தும் கைகூடி வரவேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக இரு வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைத்தன. முதல் ஆட்டத்தில் நாங்கள் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்த ஆட்டத்தில் 100 ரன்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இரு ஆட்டங்களிலும் சிறிய வித்தியாசங்களில் தோற்றோம். இவையெல்லாம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை. சிறந்த அணி என்பது கடைசிப் பகுதியில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் எடுக்கும், அல்லது ஒரு ஓவருக்கு 10 ரன்கள் கொடுக்காமல் தற்காத்துக் கொள்ளும். உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வேண்டிய அணியை இரு நாள்களில் தேர்வு செய்துவிடுவோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.