ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: பிரபல இந்திய வீராங்கனைக்குத் தடை
By DIN | Published On : 13th October 2022 12:22 PM | Last Updated : 13th October 2022 12:22 PM | அ+அ அ- |

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்த பிரபல வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கெளருக்கு 3 வருட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கெளர் இறுதிச்சுற்று வரை முன்னேறி 6-வது இடம் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில் 66.59 மீ. தூரம் எறிந்து தேசிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பாட்டியாலாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியை எடுத்து சோதனை செய்ததில் அவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதைக் கண்டுபிடிக்கப்பட்டது. 1988 சியோல் ஒலிம்பிக்ஸில் பென் ஜான்சன் பயன்படுத்திய ஊக்க மருந்தையே கமல்ப்ரீத் கெளரும் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து போட்டிகளில் பங்கேற்க 26 வயது கமல்ப்ரீத் கெளருக்கு மூன்று ஆண்டுகள் இடைக்காலத் தடை விதித்துள்ளது தடகள ஒழுங்குக் குழு. வழக்கமாக இந்தக் குற்றத்துக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படும். ஆனால் தன் தவறை கமல்ப்ரீத் கெளர் ஒப்புக்கொண்ட காரணத்தால் ஓர் ஆண்டு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அவர் 6-ம் இடம் பிடித்ததில் மாற்றம் எதுவும் செய்யப்படாது. எனினும் கமல்ப்ரீத் கெளரால் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க முடியாது. அவருடைய தடைக்காலம் மார்ச் 2025-ல் முடிவடைகிறது.