பயிற்சியின்போது ஆட்டமிழந்தால்...: ஆச்சர்யப்படுத்திய சூர்யகுமார் யாதவ்!
By DIN | Published On : 27th October 2022 05:06 PM | Last Updated : 27th October 2022 05:06 PM | அ+அ அ- |

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக சிட்னியில் இன்று விளையாடியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவித்தார். முதல்முறையாக டி20 சர்வதேச ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதின. சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள ஒரே அசோசியேட் அணியான நெதர்லாந்து, முதல் ஆட்டத்தில் நூலிழையில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் கோலி 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நெதர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நன்கு பந்துவீசி, ஃபீல்டிங் செய்த நெதர்லாந்து அணியால் பேட்டிங்கிலும் ஈடுகொடுக்க முடியாமல் போனது. புவனேஸ்வர், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதிரடியாக விளையாடி அரை சதமெடுத்த சூர்யகுமார் யாதவ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, குரூப் 2 பிரிவில் முதலிடம் வகிக்கிறது. ஞாயிறன்று பெர்த்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
பரிசளிப்பு விழாவில் ஆட்ட நாயகன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
பேட்டிங் செய்ய சென்றபோது என் திறமையை வெளிப்படுத்த எண்ணினேன். நான் களமிறங்கியபோது எனக்கு அளிக்கப்பட்ட தகவல் - ஒரு ஓவருக்கு 8-10 ரன்கள் தேவை என்பதுதான். இதன்மூலம் நல்ல ஸ்கோரை எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு அளிக்க முடியும். கோலியுடன் விளையாடியது நல்ல அனுபவம். நீ எப்படி விளையாடுவாயோ அதே போல விளையாடு என என்னிடம் சொன்னார் கோலி. பயிற்சியின்போது எனக்கு நானே அழுத்தம் கொடுத்துக் கொள்வேன். பயிற்சியின்போது நான் ஆட்டமிழந்து விட்டால் பிறகு மீண்டும் விளையாட மாட்டேன் என்றார்.