டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்திய இந்தியா!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்திய இந்தியா!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக சிட்னியில் இன்று விளையாடியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவித்தார்.  இதனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களான அஸ்வினும் தினேஷ் கார்த்திக்கும் இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது. நெதர்லாந்து அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை என அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.

முதல்முறையாக டி20 சர்வதேச ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதின. சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள ஒரே அசோசியேட் அணியான நெதர்லாந்து, முதல் ஆட்டத்தில் நூலிழையில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. 

3-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கே.எல். ராகுல். இதற்கு டிஆர்எஸ் முறையீடு கேட்கலாமா என ரோஹித் சர்மாவிடம் விவாதித்தார் ராகுல். ஆனால் தேவையில்லை என அவர் சொன்னதால் ஓய்வறைக்குத் திரும்பினார் ராகுல். ஆனால் லெக் ஸ்டம்பைப் பந்து தவறவிட்டது பிறகு தெரிய வந்தது. இதனால் ராகுல், டிஆர்எஸ் முறையீடு கோரியிருந்தால் நிச்சயம் ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார்.

ராகுல் செய்த தவறை ரோஹித் சர்மா செய்யவில்லை. 27 ரன்களில் அவர் இருந்தபோது வான் பீக் வீசிய பந்து காலில் பட்டது. இதை எல்பிடபிள்யூ என அறிவித்தார் நடுவர். எனினும் டிஆர்எஸ் முறையீடு கோரினார் ரோஹித் சர்மா. இதில் பந்து, மட்டையில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டது தெரியவந்ததால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.

இதன்பிறகு கோலியும் சூர்யகுமார் யாதவும் அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தார்கள். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்குச் சற்று கடினமாக இருந்ததால் நிறைய ரன்களை ஓடியும் எடுத்தார்கள். 37 பந்துகளில் சதமடித்தார் விராட் கோலி. தொடர்ச்சியாக இரு அரை சதங்களை இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் எடுத்துள்ளார். 18-வது ஓவரில் 150 ரன்களை எடுத்தது இந்திய அணி.

20-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் சூர்யகுமார் யாதவ். 25 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். கோலி 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. கோலி - சூர்யகுமார் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து அசத்தியது.

ஆரம்பம் முதல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இலக்கை நோக்கி செல்ல முடியாமல் தடுமாறியது நெதர்லாந்து அணி. முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களும் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன்களும் எடுத்தது. தினேஷ் கார்த்திக் இரண்டு ஸ்டம்பிங் வாய்ப்புகளைத் தவறவிட்டும் நெதர்லாந்து பேட்டர்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. இன்றும் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசியில் நெதர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நன்கு பந்துவீசி, ஃபீல்டிங் செய்த நெதர்லாந்து அணியால் பேட்டிங்கிலும் ஈடுகொடுக்க முடியாமல் போனது. புவனேஸ்வர், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதிரடியாக விளையாடி அரை சதமெடுத்த சூர்யகுமார் யாதவ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, குரூப் 2 பிரிவில் முதலிடம் வகிக்கிறது. ஞாயிறன்று பெர்த்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com