டி20 உலகக் கோப்பை அணியில் ஜடேஜா இல்லை, இந்தியாவுக்கு பின்னடைவு
By DIN | Published On : 03rd September 2022 08:09 PM | Last Updated : 03rd September 2022 08:09 PM | அ+அ அ- |

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் உலகக் கோப்பை டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பையின் முதல் இரு போட்டிகளில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா பின்னர் காயம் காரணமாக ஆசியக் கோப்பையிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விலகுவது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா!
இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ ஜடேஜாவின் வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமாக உள்ளது. அதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அதனால் அவர் மீண்டும் எப்போது அணிக்குத் திரும்புவார் என்பதை தற்போது கூற இயலாது. அவர் சிகிச்சை முடிந்து முழுவதும் குணமடைந்த பிறகு அணிக்குத் திரும்புவார்.” என்றார்.
அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்பதை உறுதியாக கூற முடியாது. சாதரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஒருவர் 6 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும். குறைந்தது அடுத்த 3 மாதத்திற்கு ஜடேஜாவால் கிரிக்கெட் விளையாட முடியாது. அவரது வலது முழங்காலில் நீண்ட நாட்களாகவே வலி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக ஜடேஜா தன்னை ஒரு ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனாக முன்னிலைப்படுத்தி விளையாடி வருகிறார். இதனால் அவரது பேட்டிங்கிற்கு முதலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே அவரது பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர் பந்து வீசும் போது அவரது வலது காலை தரையில் வேகமாக வைப்பதும் அவரது முழங்கால் காயத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ‘காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஏழைகளுக்காக உழைப்பதில்லை’: அமித்ஷா
உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் என மொத்தமாக ரவீந்திர ஜடேஜா 7 ஆயிரம் ஓவர்களை வீசியுள்ளார். கிரிக்கெட் பயணத்தில் 630 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 897 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல தனது கிரிக்கெட் பயணத்தில் மொத்தமாக 13 ஆயிரம் ரன்களை அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.