டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக பிரபல முன்னாள் வீரர் தேர்வு
By DIN | Published On : 09th September 2022 04:16 PM | Last Updated : 09th September 2022 04:16 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக ஹேடன் பணியாற்றினார். அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சக்லைன் முஸ்டாக்கும் பேட்டிங் பயிற்சியாளராக முகமது யூசுப்பும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஷான் டைட்டும் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த வருட பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து சக்லைன் முஸ்டாக் விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.