லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 135 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹார்திக் பாண்டியா 66 ரன்கள் குவித்தார்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். கைல் மேயர்ஸ் 24 ரன்களில் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய க்ருணால் பாண்டியா நிதானமாக விளையாடினார். கேப்டன் ராகுல் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். க்ருணால் பாண்டியா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். அவர் 61 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் லக்னௌ அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட மொஹித் சர்மா கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தன. அதன்பின், தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகள் மற்றும் 2 ரன் அவுட்டுகள் குஜராத் அணிக்கு கிடைக்க லக்னௌ ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
மொகித் சர்மாவின் சிறப்பான இறுதி ஓவரால் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாத்தில் லக்னௌ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.