ரோஹித் சர்மா சதம்: இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை!

இந்திய பேட்டர்கள் இன்று பொறுப்புடன் விளையாடியதால் 2-வது நாள் முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள்
ரோஹித் சர்மா சதம்: இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா (56 ரன்கள்), அஸ்வின் (0) களத்தில் இருந்தார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 100 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இன்று, ரோஹித் - அஸ்வின் ஜோடி, 42 ரன்கள் சேர்த்தது. 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த அஸ்வின், மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாராவும் 7 ரன்கள் மர்ஃபி பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி களமிறங்கினார். உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் பந்திலேயே கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ், 8 ரன்களில் லயன் பந்தில் போல்ட் ஆகி ஏமாற்றமளித்தார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ரோஹித் சர்மா, 171 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ள 9-வது சதம் இது.

இந்திய அணி 2-வது நாள் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 118, ஜடேஜா 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். அதன்பிறகு இன்றைய நாளின் 3-வது பகுதியில் வீசப்பட்ட முதல் ஓவரில் புதிய பந்தில் போல்ட் ஆனார் ரோஹித் சர்மா. 120 ரன்கள் எடுத்த அவருடைய விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தினார். கே.எஸ். பரத், 8 ரன்களில் மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அறிமுக டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் மர்ஃபி.

இதன்பிறகு ஜடேஜாவும் - அக்‌ஷர் படேலும் ஜோடி சேர்ந்தார்கள். இந்திய அணி 100 ரன்களாவது முன்னிலை பெற வேண்டும் என்கிற ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மேலும் ரன்கள் சேர்த்தார்கள். ஜடேஜா 114 பந்துகளில் 7 பவுண்டரிகளுடனும் அக்‌ஷர் படேல் 94 பந்துகளில் 8 பவுண்டரிகளுடனும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 

இந்திய பேட்டர்கள் இன்று பொறுப்புடன் விளையாடியதால் 2-வது நாள் முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 66, அக்‌ஷர் படேல் 52 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com