இந்தியாவுக்கு 4-0 வெற்றியா?: கம்பீர் பதில்

ஒரு தொடரின் நடுவில் உங்களுடைய பேட்டிங் தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பினால்...
இந்தியாவுக்கு 4-0 வெற்றியா?: கம்பீர் பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-0 என வெல்வது பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

தில்லி டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகுதியிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா. பின்னர் 115 ரன்களை நோக்கி பேட்டிங் செய்த இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார். 

டெஸ்ட் தொடர் பற்றி இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது:

இந்திய அணி 4-0 என வெல்லுமா என என்னால் கூற முடியாது. ஏனெனில் ஆஸி. அணியில் ஸ்மித், லபுஷேன், கவாஜா எனச் சிறந்த வீரர்கள் உள்ளார்கள். பேட்டிங்கில் இவர்களை நம்பியுள்ளது ஆஸி. அணி. இவர்களுக்கு யாரும் தடுப்பாட்டம் கற்றுத் தர முடியாது. யாராவது ஒரு வீரர் இரட்டைச் சதம் அடித்து 2001 கொல்கத்தா டெஸ்ட் சம்பவத்தை மீண்டும் நிகழ்த்தலாம். இதுபோன்ற திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஒரேடியாக ஆஸ்திரேலியாவை வெளியே தள்ள முடியாது. ஆனால் அந்த அணியில் பல பிரச்னைகள் உள்ளன.

ஒரு தொடரின் நடுவில் உங்களுடைய பேட்டிங் தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பினால் இதுவரை எடுத்த ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போகும். ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பை விடவும் தனிப்பட்ட முறையிலான ஆட்டங்கள் தான் ஆஸ்திரேலியா அணி மீண்டு வர உதவும். தன் திறமை மீது சந்தேகம் கொண்ட பல வீரர்கள் ஆஸி. அணியில் உள்ளார்கள். இதிலிருந்து மீள்வது சுலபமல்ல. கவாஜா இரட்டைச் சதமும் ஸ்மித் சதமும் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு உதவலாம். ஆனாலும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை  என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com