கண்ணீர் விட்ட ஹர்மன்ப்ரீத் கெளர்: ஆறுதல்படுத்திய முன்னாள் வீராங்கனை! (விடியோ)

சோகத்துடன் இருந்த ஹர்மன்ப்ரீத் கெளருக்கு ஆறுதல் சொன்னார் அஞ்சும் சோப்ரா.
கண்ணீர் விட்ட ஹர்மன்ப்ரீத் கெளர்: ஆறுதல்படுத்திய முன்னாள் வீராங்கனை! (விடியோ)

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியதால் கண்ணீர் விட்ட இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருக்கு ஆறுதல் அளித்துள்ளார் முன்னாள் வீராங்கனை அஞ்சும் சோப்ரா.

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அத்துடன், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களையே எட்டியது. 

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, தற்போது அரையிறுதியிலேயே அதே அணியிடம் வீழ்ந்து வெளியேறியிருக்கிறது. இதனால், உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்குச் சென்றது.

இந்திய அணி நடுவரிசை பேட்டர்களான ஹர்மன்ப்ரீத் சிங்கும் ஜெமிமாவும் நன்கு விளையாடி வெற்றிக்கு அருகில் சென்றார்கள். எனினும் ஜெமிமா 43 ரன்களிலும் ஹர்மன்ப்ரீத் கெளர் 52 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டுக் கடைசியில் இந்திய அணி தோற்றது. அதிலும் ஹர்மன்ப்ரீத் கெளர் எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆனார். 2-வது ரன் ஓடி வரும்போது பேட் ஆடுகளத்தில் இடறியதால் அவரால் கிரீஸைத் தொட முடியாமல் போனது.

இதனால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கெளர், ஓய்வறைக்குத் திரும்பும்போது மைதானத்திலேயே தனது பேட்டை கோபத்துடன் கீழே எறிந்தார். பிறகு உள்ளே சென்றபிறகு தனது பேட்டைப் படிக்கட்டில் மீண்டும் ஓங்கி அடித்தார். அவருடைய கோபம் தணிய சிறிது நேரமானது. இந்திய அணி தோல்வியடைந்த பிறகு கண்ணீர் விட்டார் ஹர்மன்ப்ரீத் கெளர். 

45 வயது அஞ்சும் சோப்ரா, இந்திய அணிக்காக 1995 முதல் 2012 வரை 2 டெஸ்ட், 127 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியவர். தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக உள்ளார். நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு சோகத்துடன் இருந்த ஹர்மன்ப்ரீத் கெளருக்கு ஆறுதல் சொன்னார் அஞ்சும் சோப்ரா. அப்போது தோல்வியினால் உண்டான சோகம் தாங்காமல் அழுதார் ஹர்மன்ப்ரீத். இதன் விடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com