ஆஸி. கிரிக்கெட்டில் நிலவும் நிறப் பாகுபாடு: பிரபல வீரர் வேதனை

ஆழ்மனதில் சார்பு நிலை வந்துவிடுகிறது...
ஆஸி. கிரிக்கெட்டில் நிலவும் நிறப் பாகுபாடு: பிரபல வீரர் வேதனை
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணிக்கான வீரர்கள் தேர்வில் நிறப் பாகுபாடு நிலவுவதாகப் பிரபல பேட்டர் உஸ்மான் கவாஜா வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 56 டெஸ்டுகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 36 வயது உஸ்மான் கவாஜா. பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 195 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சூழலில் நிலவும் பாகுபாடுகள் குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணியைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது வெள்ளை நிற வீரர்கள் தான் முழுமையாக இருப்பார்கள். எங்களுக்கு ஆதரவளிக்காத ஆஸி. அணியை நாங்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்றுதான் சிறுவயதில் தோன்றும். 

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் என்னிடம் இந்திய டெஸ்ட் தொடருக்காக வாழ்த்து தெரிவித்தார்கள். இருந்தும் நாங்கள் இந்தியாவுக்குத்தான் ஆதரவளிப்போம் என்றார்கள். எங்குப் பிறந்தீர்கள் என்று கேட்டேன். ஆஸ்திரேலியாவில் எனப் பதில் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவளியுங்கள். உங்களின் பிரதிநிதி நான் என்றேன். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெரும்பான்மையான தெற்காசிய மக்கள், ஆஸி. அணிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். 

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் நிறைய பேரை ஆஸ்திரேலியாவில் காண முடியும். ஆனால் அந்த எண்ணிக்கை அப்படியே குறைந்துவிடுகிறது. அதனால் தான் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் நான் கூறுகிறேன் - நிறைய செலவு செய்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒன்று சரியில்லை. 10 வருடங்களாக இதை மாற்ற நினைத்தும் எதுவும் மாறவில்லை. 

மேல்மட்டத்தில் பல பயிற்சியாளர்களும் தேர்வுக்குழுவினரும் வெள்ளையர்களாக உள்ளார்கள். ஆழ்மனதில் சார்பு நிலை வந்துவிடுகிறது. ஒரு வெள்ளை நிற வீரரும் ஓர் ஆசிய வீரரும் போட்டிக்கு இருந்தால் வெள்ளையராக உள்ள தேர்வுக்குழு உறுப்பினர், வெள்ளை நிற வீரரையே தேர்வு செய்வார். அவருடைய மகனைப் போல அந்த வீரர் இருக்கலாம். அந்த நிறம் தான் அவருக்குப் பழக்கமானதாக இருக்கிறது. பல சமயங்களில் நான் தேர்வாகியிருக்க வேண்டிய அணிகளில் தேர்வாகவில்லை என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 460-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களில் 99 சதவீதத்தினர் வெள்ளை நிறத்தவர்கள். ஆஸி. டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ஒரே இஸ்லாமியர், கவாஜா தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com