வெளியேறியது மே.இ.தீவுகள்: உலகக் கோப்பைக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி!

உலகக் கோப்பைக்கான வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் இழந்ததால் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வெளியேறியது மே.இ.தீவுகள்: உலகக் கோப்பைக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி!

உலகக் கோப்பைக்கான வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் இழந்ததால் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நேற்றையப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியதால் இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக கடும் போட்டி நிலவுகிறது.  

இலங்கை அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது.  இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஜிம்பாப்வே உடனான இன்றையப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் உலகக் கோப்பைக்கு எளிதில் தகுதி பெற்று விடும். இன்றையப் போட்டியில் தோற்றாலும் இலங்கைக்கு ஜூலை 7 ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் வென்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  இலங்கை அணியின் ரன் ரேட் 1.832 என நல்ல நிலையில் இருக்கிறது. 

ஜிம்பாப்வே அணியும் இலங்கையைப் போல இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் வலுவாக உள்ளது. ஆனால், ஜிம்பாப்வே அணியின் ரன் ரேட் குறைவாகவே உள்ளது. ரன் ரேட் குறைவாக உள்ளதால் இன்றையப் போட்டியில் இலங்கையை வீழ்த்தினாலும் ஜிம்பாப்வே அணியின் ரன் ரேட்டில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.  ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விடும். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து அதிகப்படுத்தியுள்ளது. அந்த அணி மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றையப் போட்டியில் இலங்கை ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஸ்காட்லாந்து மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது. இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று அடுத்த போட்டிகளில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளும் சமமாக 8 புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் தகுதி பெறும்.

ஸ்காட்லாந்து 0.188 ரன் ரேட்டில் உள்ளதால் ஜிம்பாப்வேக்கு எதிரான அடுத்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. நெதர்லாந்து இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி மீதமுள்ள 2 போட்டிகளில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை தகுதி பெறும் பட்சத்தில், நெதர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய மூன்று அணிகளில் யார் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது என்ற போட்டி உருவாகும்.

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் உள்ள நான்கு அணிகளில் நெதர்லாந்து -0.560  என்ற மிகக் குறைந்த ரன் ரேட்டுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com