உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த மே.இ.தீவுகள்: என்ன சொல்கிறார் ஜேசன் ஹோல்டர்!

கிரிக்கெட் வீரர்கள் தங்களது பிராந்திய மனப்பான்மையை விடுத்து ஒரு அணியாக ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த மே.இ.தீவுகள்: என்ன சொல்கிறார் ஜேசன் ஹோல்டர்!

கிரிக்கெட் வீரர்கள் தங்களது பிராந்திய மனப்பான்மையை விடுத்து ஒரு அணியாக ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் சிக்ஸில் ஸ்காட்லாந்துக்கு எதிரான மிக முக்கியப் போட்டியில் தோல்வியடைந்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்த பின்பு இதனை அவர் தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மேற்கிந்திந்தியத் தீவுகள், உலகக் கோப்பை தொடங்கப்பட்ட ஆண்டான 1975 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முறை கூட உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெறாமல் இருந்ததில்லை. ஆனால், ஸ்காட்லாந்திடம் நேற்று (ஜூலை 1) அடைந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை மேற்கிந்திந்தியத் தீவுகள் இழந்துள்ளது. 

நேற்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. 

ஸ்காட்லாந்திடம் நேற்று ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய ஜேசன் ஹோல்டர் கூறியதாவது:  கிரிக்கெட் என்பது தனிப்பட்ட ஒரு விஷயமோ அல்லது பிராந்தியம் சார்ந்ததோ இல்லை. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு அணியாக விளையாட வேண்டும். நாம் குழுவாக ஒன்றிணைந்து முன்னேறி செல்ல வேண்டும். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி எவ்வளவு முக்கியமான போட்டி என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. இருப்பினும், எங்களால் முக்கியமான போட்டியில் வெற்றியடைய முடியவில்லை. எங்களுக்கு உலகக் கோப்பைக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது என தெரிந்தது. ஸ்காட்லாந்திடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை. இந்த உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பை இழந்த போதிலும் சில நேர்மறையான விஷயங்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இல்லாமல் இல்லை.

நிகோலஸ் பூரன் இந்த சூப்பர் சிக்ஸ் முழுவதும் விளையாடிய விதம் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியளித்தது. இளம் வீரர்கள் சிலருக்கு இது போன்ற பெரிய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு குறுகிய கால முடிவுகள் பலனளிக்காது. அணியில் உள்ள  குறைகளை உடனடியாக சரிசெய்வது கடினம். அதற்காக நாங்கள் சிறிது நேரம் கொடுக்க வேண்டும். நாங்கள் எங்களது வளர்ச்சிக்கு நேரம் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக இன்னும் ஓரிரு ஆண்டுகளில் எங்களது முயற்சியால் சிறந்த பலனை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஜேசன் ஹோல்டர் 45 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com