டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதம் குறித்து மனம் திறந்த கேமரூன் கிரீன்!

டெஸ்ட் போட்டியில் இன்று (மார்ச் 10) தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தற்போது ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதம் குறித்து மனம் திறந்த கேமரூன் கிரீன்!

டெஸ்ட் போட்டியில் இன்று (மார்ச் 10) தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தற்போது ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை அடைந்தது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தற்போது ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உணர்வதாக மனம் திறந்துள்ளார். 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேமரூன் கிரீன் கூறியதாவது: இன்று சதம் அடித்ததன் மூலம் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உணர்கிறேன். இது மிகவும் சிறப்பானத் தருணம். எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது என நான் நினைக்கிறேன். நான் 70 ரன்களில் இருந்து 80 ரன்களுக்கும், 80 ரன்களில் இருந்து 90 ரன்களுக்கும் வேகமாக நகர்ந்தேன். அது எனக்கு சதம் அடிப்பது குறித்து அதிக நேரம் அதிகம் யோசிக்காமல் இருக்க உதவியது. இதற்கு முன்பு 19 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளேன். அதில் எனது அதிகபட்ச ஸ்கோர் 84. அதனால், எனது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. உண்மையில் இது சிறப்பானத் தருணம். 95 ரன்களில் குவித்திருக்கையில் உணவு இடைவேளைக்கு சென்று திரும்பிய அந்த 40 நிமிடங்கள் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் போல் தோன்றியது. ஆனால், நான் கவாஜாவுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். நான் விளையாடிய முழுநேரமும் அவர் என்னுடன் எதிர் முனையில் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவரது அனுபவம் எனக்கு பெரிதும் உதவியது. 

இது என்னுடைய 20-வது டெஸ்ட் போட்டி. அதனால், டெஸ்ட் போட்டிகளில் உள்ள ஏற்ற இறக்கங்களை பார்க்க நல்ல வாய்ப்பாக இந்த ஆட்டங்கள் அமைந்தன. டெஸ்ட் போட்டிகள் உண்மையில் கடினமானவை. உங்களுக்கு சில தருணங்கள் கிடைக்கும்போது அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு விநாடிகளையும் மகிழ்ச்சியாக கடக்கிறேன். மோதேரா போன்ற நல்ல மைதானங்களில் நேராகப் பந்தை அடித்து விளையாட முடிகிறது. ஆடுகளம் அதற்கு ஏற்றவாறு சிறப்பாக இருந்தது.  

உஸ்மான் கவாஜா அதிக அனுபவம் வாய்ந்தவர். அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் என்னைப் போன்ற வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவரைப் போன்று ஆஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் உள்ளனர். அவர்களைப் போன்ற வீரர்களுடன் இணைந்து விளையாடுவதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com