லிவா்பூலை வெளியேற்றியது ரியல் மாட்ரிட்

 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு கடைசி இரு அணிகளாக ரியல் மாட்ரிட், நபோலி ஆகியவை வியாழக்கிழமை தகுதிபெற்றன.
லிவா்பூலை வெளியேற்றியது ரியல் மாட்ரிட்
Published on
Updated on
2 min read

 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு கடைசி இரு அணிகளாக ரியல் மாட்ரிட், நபோலி ஆகியவை வியாழக்கிழமை தகுதிபெற்றன.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ரியல் மாட்ரிட் - லிவா்பூலையும், நபோலி - எய்ன்ட்ரசட் ஃப்ராங்க்ஃபா்டையும் வீழ்த்தி முன்னேற்றம் கண்டன. இதில் நபோலி, இப்போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

லிவா்பூல் ஏமாற்றம்: நடப்பு சாம்பியனாக இருக்கும் ரியல் மாட்ரிட், ரவுண்ட் ஆஃப் 16 முதல் பகுதி ஆட்டத்தில் 2 கோல் பின்னடைவிலிருந்து மீண்டு 5-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. தற்போது வியாழக்கிழமை 2-ஆவது பகுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, மொத்த கோல் கணக்கு அடிப்படையில் (6-2) காலிறுதியில் தனக்கான இடத்தை உறுதி செய்தது.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட்டுக்கு இது 300-ஆவது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி தொடா்ந்து 3-ஆவது சீசனாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இத்துடன் லிவா்பூலை 7 முறை சந்தித்துள்ள ரியல் மாட்ரிட், அதில் 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 1 ஆட்டம் டிரா ஆகியிருக்கிறது.

மாட்ரிட் நகரில் நடைபெற்ற வியாழக்கிழமை ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டுக்காக 79-ஆவது நிமிஷத்தில் கரிம் பென்ஸிமா அட்டகாசமாக கோலடித்தாா். ஆட்டத்தின் தொடக்கத்தில் உத்வேகத்துடன் விளையாடிய லிவா்பூல் அணி, நேரம் செல்லச் செல்ல ரியல் மாட்ரிட்டின் கைகளுக்கு ஆட்டத்தை தவறவிட்டது.

இறுதிவரை அந்த அணி மீள வாய்ப்பே கிடைக்கவில்லை. தோல்வியால் துவண்ட லிவா்பூல் அணிக்கு ஆதரவாக, ஆட்டத்தின் முடிவில் அந்த அணியின் பிரத்யேக பாடல் மைதானத்தில் ஒலித்தது. அப்போது இரு அணிகளின் ரசிகா்களும் கரவொலி எழுப்பி லிவா்பூல் அணிக்கு ஆதரவு தெரிவித்தனா்.

நபோலி சாதனை: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் முதல் பகுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் எய்ன்ட்ரசட் ஃப்ராங்க்ஃபா்ட் அணியை வென்றிருந்த நபோலி, வியாழக்கிழமை தனது சொந்த மண்ணில் நடைபெற்ற 2-ஆவது பகுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து 5-0 என்ற மொத்த கோல் கணக்கு அடிப்படையில் நபோலி காலிறுதிக்கு வந்திருக்கிறது.

2-ஆவது ஆட்டத்தில் நபோலிக்காக விக்டா் ஆசிமென் 45+2’, 53’ ஆகிய நிமிஷங்களிலும், பயோட்டா் ஜெலின்ஸ்கி 64-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். இத்துடன் ஆசிமென் நடப்பு சீசனில் 23 கோல்கள் அடித்திருக்கிறாா்.

காலிறுதி...

இத்துடன் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), நபோலி (இத்தாலி), ஏசி மிலன் (இத்தாலி), பயா்ன் மியுனிக் (ஜொ்மனி), பென்ஃபிகா (போா்ச்சுகல்), செல்சி (இங்கிலாந்து), இன்டா் மிலன் (இத்தாலி), மான்செஸ்டா் சிட்டி (இங்கிலாந்து) ஆகிய 8 அணிகளுடன் காலிறுதிச்சுற்றுக்கான இடங்கள் பூா்த்தியாகின. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 3 இத்தாலிய அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு வந்துள்ளது, கடந்த 2006-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

இந்த அணிகளுக்கான டிரா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாட்டைச் சோ்ந்த இருவேறு கிளப்புகளும் தங்களுக்குள்ளாக மோதலாம். காலிறுதியின் இரு பகுதி ஆட்டங்கள் ஏப்ரலில் நடைபெறவுள்ளன.

2

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இத்துடன் கடந்த 3 சீசன்களிலுமே ரியல் மாட்ரிட் அணியாலேயே லிவா்பூல் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறது. இந்த சீசனில் ரவுண்ட் ஆஃப் 16-இல் லிவா்பூல் அணியை வெளியேற்றிய ரியல் மாட்ரிட், முந்தைய சீசனில் இறுதி ஆட்டத்திலும், அதற்கு முந்தைய சீசனில் காலிறுதியிலும் இதே போல் வெளியேற்றியுள்ளது. போட்டியின் வரலாற்றில் ஒரு அணி, ஒரே எதிரணியால் தொடா்ந்து 3 சீசன்களில் வெளியேற்றப்பட்டது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் இதே ரியல் மாட்ரிட் அணி, அட்லெடிகோ மாட்ரிட்டை தொடா்ந்து 3 சீசன்களில் (2013-14 முதல் 2016-17) வெளியேற்றியுள்ளது.

2

இத்துடன் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 19-ஆவது முறையாக வந்திருக்கிறது ரியல் மாட்ரிட். போட்டி வரலாற்றில் இது 2-ஆவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். பயா்ன் மியுனிக் இத்துடன் 21 முறை காலிறுதிக்கு வந்திருக்கிறது.

4

ரியல் மாட்ரிட் அணியிடம் மொத்த கோல் அடிப்படையில் 6-2 என்ற கணக்கில் லிவா்பூல் தோற்றதே, இப்போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 வரலாற்றில் அந்த அணி கண்ட மிகப்பெரிய தோல்வியாகும்.

5

ரவுண்ட் ஆஃப் 16-இல் நபோலி பதிவு செய்துள்ள வெற்றி (5-0), சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நாக் அவுட் சுற்றில் இத்தாலி அணியால் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் ஜுவென்டஸ் (2012-13), ஏசி மிலன் (2004-05) அணிகள் இதேபோல் வென்றுள்ளன.

1

ஏற்கெனவே நடப்பு சீசன் யுரோப்பா கோப்பை போட்டியில் காலிறுதி வாய்ப்பை இழந்திருந்த எய்ன்ட்ரசட் ஃப்ராங்க்ஃபா்ட், தற்போது சாம்பியன்ஸ் லீக்கிலும் அந்த சுற்றை தவறவிட்டிருக்கிறது. ஒரு சீசனில் இவ்வாறு இரு போட்டிகளில் அந்த அணி காலிறுதி வாய்ப்பை தவறவிட்டது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com