‘உங்கள் அன்பில் திணறுகிறேன்’: மேக்ஸ்வெல்

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
‘உங்கள் அன்பில் திணறுகிறேன்’: மேக்ஸ்வெல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை நேற்று (செவ்வாய்க்கிழமை) வென்றது. இதன் மூலம், அரையிறுதிக்கும் தகுதிபெற்றது. 

இந்த ஆட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை, கிளென் மேக்ஸ்வெல் தனது அதிரடி இரட்டைச் சதத்தால் வெற்றிப் பாதைக்குத் திருப்பினார்.  நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் ஆனார் மேக்ஸ்வெல். ஆட்டத்தின்போது வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், வலியுடன் போராடி விக்கெட்டையும் இழக்காமல் நிலைத்து நின்றார்.

வலியால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல்!
வலியால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல்!

ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளிடையே ஓடி ரன்கள் எடுக்க முடியாத நிலைக்கு சென்ற மேக்ஸ்வெல், ஸ்டிரைக்கிங் எண்டில் இருந்தபடி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசத் தொடங்கி வெற்றி தேடித் தந்தார். முக்கியமாக, ஆஸி. வெல்ல வாய்ப்பே இல்லாத நிலையிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வெற்றியை தனி ஒரு வீரராக பெற்றுத்தந்தார். இந்த ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள், போட்டி முடிந்ததும் மேக்ஸ்வெல்லை பாராட்டினர். சச்சின் டெண்டுல்கர், ‘என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் போட்டி இதுதான்’ எனக் கூறியுள்ளார். 

இதுபோல் பல பிரபல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தைப் புகழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், மேக்ஸ்வெல் தன் எக்ஸ் தளத்தில், “உங்கள் அன்பினால் நிரம்பி வழிகிறேன். வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. பேட் கம்மின்ஸ் அங்கு (மைதானத்தில்) இருந்தது அற்புதம். இனி தந்தைக்கான கடமைகளுக்கு திரும்பும் நேரம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆட்டத்தை வழங்கிய மேக்ஸ்வெல், தன்னுடைய திறமைக்கான அங்கீகாரமாக உலகளவில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com