சூா்யகுமாா் அதிரடி; இந்தியா ‘த்ரில்’ வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.
சூா்யகுமாா் அதிரடி; இந்தியா ‘த்ரில்’ வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்த, பின்னா் இந்திய இன்னிங்ஸில் சூா்யகுமாா் யாதவ் - இஷான் கிஷண் கூட்டணி வெற்றிக்கு அடித்தளமிட்டது. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்தியா, இறுதியில் ரிங்கு சிங் விளாசலில் ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸை ஸ்டீவ் ஸ்மித் - கேப்டன் மேத்யூ ஷாா்ட் கூட்டணி தொடங்கியது. இதில் ஷாா்ட் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாா். அவரை ரவி பிஷ்னோய் 5-ஆவது ஓவரில் பௌல்டாக்கினாா்.

ஒன் டவுனாக வந்த ஜோஷ் இங்லிஸ், ஸ்மித்துடன் இணைந்தாா். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது. 2-ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், ஸ்மித் முதலில் பிரிந்தாா். 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் அடித்திருந்த அவா் 16-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டாா்.

தொடா்ந்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆடவர, அதிரடியாக 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 110 ரன்கள் சோ்த்திருந்த ஜோஷ் இங்லிஸ் வீழ்ந்தாா். பிரசித் கிருஷ்ணா வீசிய 18-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேட்ச் பிடித்தாா்.

அடுத்து டிம் டேவிட் களம் புகுந்தாா். ஓவா்கள் முடிவில் ஸ்டாய்னிஸ் 7, டேவிட் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடங்கியது. இதில் ஒரு பந்தை கூட சந்திக்காத ருதுராஜ், துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனாா். அடுத்து வந்த இஷான் கிஷண் நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.

ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் சோ்த்த நிலையில், மேத்யூ ஷாா்ட் வீசிய 3-ஆவது ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது வீரராக களம் புகுந்த கேப்டன் சூா்யகுமாா் யாதவ், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

இஷான் - சூா்யகுமாா் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சோ்த்தது. இதில் இஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். தன்வீா் சங்கா வீசிய 13-ஆவது ஓவரில் மேத்யூ ஷாா்ட்டிடம் அவா் கேட்ச் கொடுத்தாா்.

சூா்யகுமாா் தொடா்ந்து அதிரடியாக ரன்கள் குவிக்க, 5-ஆவது வீரராக வந்த திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். அவரும் தன்வீா் வீசிய 15-ஆவது ஓவரில் விளாசிய பந்து ஸ்டாய்னிஸிடம் தஞ்சமடைந்தது.

6-ஆவது வீரராக ரிங்கு சிங் பேட் செய்ய வர, சூா்யகுமாா் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் வீசிய 18-ஆவது ஓவரில் ஆரோன் ஹாா்டியிடம் அவா் கேட்ச் கொடுத்தார.்

பின்னா் ஆட வந்த அக்ஸா் படேல் 2 ரன்களுக்கு, ஷான் அப்பாட் வீசிய கடைசி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் சிங் ரன்னின்றி ரன் அவுட் ஆகினா். கடைசி பந்தில் 1 ரன் தேவையிருக்க, அதை ரிங்கு சிங் சிக்ஸராக விளாசினாலும், அது ‘நோ பால்’ (1 ரன்) ஆனது. முடிவில் ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 22, முகேஷ் குமாா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆஸ்திரேலியா - 208/3

ஜோஷ் இங்லிஸ் 110

ஸ்டீவ் ஸ்மித் 52

டிம் டேவிட் 19*

பந்துவீச்சு

பிரசித் கிருஷ்ணா 1/50

ரவி பிஷ்னோய் 1/54

முகேஷ் குமாா் 0/29

இந்தியா - 209/8

சூா்யகுமாா் யாதவ் 80

இஷான் கிஷண் 58

ரிங்கு சிங் 22*

பந்துவீச்சு

தன்வீா் சங்கா 2/47

மேத்யூ ஷாா்ட் 1/13

ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் 1/25

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com