யார் இந்த ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
யார் இந்த ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.

யார் இந்த ரச்சின் ரவீந்திரா? 

ரச்சின் ரவீந்திரா கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வெல்லிங்டனில் பிறந்தார். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக பணியாற்றியவர். ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ரச்சின் ரவீந்திராவுக்கு சிறுவயது முதல் அவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தியே பயிற்சியாளராக இருந்துள்ளார்.

ரச்சின் எனப் பெயர் வர காரணம்

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரான ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிடின் மீது உள்ள அன்பினால் தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து ’ர’ வையும் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ’ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார். 

நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் இணைந்தார் ரச்சின் ரவீந்திரா. 2016 ஆம்  ஆண்டு உலகக் கோப்பையின்போது அவருக்கு வயது வெறும் 16 ஆகும். 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரிலும் ரவீந்திரா விளையாடினார்.  அதே ஆண்டில் நியூசிலாந்து அணியின் வளர்ந்து வரும் வீரராக ரச்சின் ரவீந்திராவை ஐசிசி அறிவித்தது.  2018 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானார். இந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியிலும் அவர் இடம் பிடித்தார். அணியில் இடம்பிடித்த அவர் உலகக் கோப்பையில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய முதல் சதமாகும். 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை

டெஸ்ட் - 3 போட்டிகள் (73 ரன்கள், 3 விக்கெட்டுகள், சிறந்த ஸ்கோர் 18)
ஒருநாள் - 13 போட்டிகள் (312 ரன்கள், 13 விக்கெட்டுகள், சிறந்த ஸ்கோர் 123*)
டி20 - 18 போட்டிகள் (145 ரன்கள், 11 விக்கெட்டுகள்,  சிறந்த ஸ்கோர் 26)

வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரச்சின் 

நியூசிலாந்தின் முக்கிய வீரர்களான கேன் வில்லியன்சன், டிம் சௌதி மற்றும் ஃபெர்க்யூசன் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. முக்கிய வீரர்கள் இல்லாததால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்க தயாராக இருக்குமாறு இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பையின் அறிமுகப் போட்டியிலேயே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். 

வளர்ந்து வரும் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு இந்த உலகக் கோப்பை தொடர் ஒரு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அறிமுகப் போட்டியில் அசத்திய ரச்சின் இனிவரும் போட்டிகளில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com