உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று: ஆஸ்திரேலியா தகுதி பெறாமல் போக வாய்ப்புள்ளதா?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸி. அணி தோற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று: ஆஸ்திரேலியா தகுதி பெறாமல் போக வாய்ப்புள்ளதா?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸி. அணி தோற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான சவாலை எதிர்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது ஆஸ்திரேலிய அணி. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 75.56% புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா தோற்று நியூசிலாந்தில் விளையாடும் இலங்கை அணி இரு டெஸ்டுகளையும் வென்றால் மட்டுமே ஆஸி. அணியின் வாய்ப்பு பறிபோகும் என்கிற நிலைமை இருந்தது.

தற்போது அது நிஜமாகிவிடுமோ என அச்சப்பட ஆரம்பித்து விட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை அடைந்ததால் இந்தியாவின் 4-0 வெற்றி பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா நான்கு டெஸ்டுகளிலும் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து - இலங்கை ஆகிய அணிகள் தலா இரு டெஸ்டுகளிலும் விளையாடுகின்றன.

இந்தியாவில் விளையாடும் நான்கு டெஸ்டுகளில் ஒன்றை டிரா செய்தாலும் ஆஸ்திரேலிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நான்கு டெஸ்டுகளிலும் ஆஸி. அணி தோற்றால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற இதர அணிகளின் தயவு தேவைப்படும். 

இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என வென்றால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறலாம். இல்லாவிட்டால் இதர அணிகளின் தயவு தேவைப்படும். 2-2 என தொடரை செய்தால் என்ன ஆகும்? இலங்கை அணி 2-0 என வென்றால் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இறுதிச்சுற்றில் மோதும்.

இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் தங்களுடைய டெஸ்ட் தொடர்களை முழுமையாக வென்றாலும் இதர அணிகளின் முடிவுகளைக் கொண்டே அந்த அணிகளால் இறுதிச்சுற்றில் விளையாட முடியும். ஆஸ்திரேலியா 0-4 எனத் தோற்று, இலங்கை அணி 2-0 என வென்றால் இறுதிச்சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும்.

தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளதா? இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்து, இலங்கை ஒரு டெஸ்டை மட்டும் வென்று, தென்னாப்பிரிக்கா 2-0 என வென்றால் அந்த அணி தான் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று, ஜூன் 7-11 தேதிகளில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com