தோல்விக்கு அது மட்டுமே காரணமல்ல: இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர்
By DIN | Published On : 23rd January 2023 12:20 PM | Last Updated : 23rd January 2023 12:20 PM | அ+அ அ- |

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.
போட்டியை நடத்தும் இந்தியா நேரடியாக காலிறுதிக்குத் தகுதிபெறத் தவறிய நிலையில், கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்ள, முதலில் அந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட "ஷூட் அவுட்' வாய்ப்பில் நியூஸிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்திய அணியின் தோல்வி பற்றி பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறியதாவது:
பெனால்டி கார்னர்களை கோல்களாக மாற்றாதது தோல்விக்கான காரணமாகிவிட்டது. (இந்திய அணிக்கு 11 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. அவற்றில் இரு கோல்களை மட்டுமே அடித்தது). எதிரணியின் வட்டத்துக்குள் பலமுறை ஊடுருவிச் சென்றும் அதை கோலாக மாற்ற முடியவில்லை. நாங்கள் 3 கோல்களை அடித்தோம். ஒரு வெற்றிக்கு 3, 4 கோல்களே போதுமானதாக இருக்கும். தடுப்பாட்டத்திலும் நாங்கள் இன்னும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். அதேசமயம், பெனால்டி கார்னரை கோலாக மாற்றாதது மட்டும் தோல்விக்கு முக்கியக் காரணமல்ல. வெற்றிக்கான பல வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கினோம். பந்தைத் தொடர்ந்து வசப்படுத்த முடியாமல் அவர்களிடம் கொடுத்துவிட்டோம். இந்த அளவிலான ஆட்டங்களில் அதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது என்றார்.