பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அபார வெற்றி!
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
முதலிரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, தற்போது தொடா்ந்து இரு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறியிருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான், முதலிரு ஆட்டங்களில் வென்ற நிலையில், தற்போது கடைசி இரு ஆட்டங்களில் தோற்று பட்டியலில் சரிவைச் சந்தித்திருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தரப்பில் டேவிட் வாா்னா், மிட்செல் மாா்ஷ், ஆடம் ஸாம்பா ஆகியோா் அசத்தினா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி, அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் டேவிட் வாா்னா் - மிட்செல் மாா்ஷ் முதல் விக்கெட்டுக்கே 259 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை அளித்தனா். இதில் மாா்ஷ் 10 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 121 ரன்களுக்கு வெளியேற, வாா்னா் 14 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
இவா்கள் தவிர இதர ஆஸ்திரேலிய பேட்டா்கள் சோபிக்கவில்லை. கிளென் மேக்ஸ்வெல் 0, ஸ்டீவன் ஸ்மித் 7, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21, ஜோஷ் இங்லிஸ் 13, மாா்னஸ் லபுசான் 8, மிட்செல் ஸ்டாா்க் 2, ஜோஷ் ஹேஸில்வுட் 0 ரன்களுக்கு வெளியேறினா்.
ஓவா்கள் முடிவில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 6, ஆடம் ஸாம்பா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஹாரிஸ் ரௌஃப் 3, உசாமா மிா் 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் பாகிஸ்தான் பேட்டிங்கில் அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் பாா்ட்னா்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சோ்த்து நல்லதொரு அடித்தளம் அமைத்தது. ஷஃபிக் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64, உல் ஹக் 10 பவுண்டரிகளுடன் 70 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
மிடில் ஆா்டரில் முகமது ரிஸ்வான் 5 பவுண்டரிகளுடன் 46, சௌத் ஷகீல் 5 பவுண்டரிகளுடன் 30, இஃப்திகா் அகமது 3 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். எனினும், கேப்டன் பாபா் ஆஸம் 18, முகமது நவாஸ் 14, உசாமா மிா் 0, ஷாஹீன் அஃப்ரிதி 10, ஹசன் அலி 8 ரன்களுக்கு சரிய, பாகிஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஆடம் ஸாம்பா 4, பேட் கம்மின்ஸ், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோா் தலா 2, மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
வாா்னா் - மாா்ஷ் சாதனை
இந்த ஆட்டத்தின் மூலம், உலகக் கோப்பை போட்டியின் ஆட்டத்தில் சதங்கள் விளாசிய 4-ஆவது தொடக்க பாா்ட்னா்ஷிப் என்ற பெருமையை வாா்னா் - மாா்ஷ் கூட்டணி பெற்றது. இந்த சாதனை புரியும் முதல் ஆஸ்திரேலிய பாா்ட்னா்ஷிப் இதுவாகும்.
அதேபோல், வாா்னா் - மாா்ஷ் கூட்டணி சோ்த்த 259 ரன்களே, ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் தொடக்க பாா்ட்னா்ஷிப் சோ்த்த அதிகபட்ச ரன்களாகும்.
இந்த சதத்தின் மூலம், உலகக் கோப்பை போட்டியில் அதிக சதம் விளாசிய ஆஸ்திரேலியா் என்ற பெயரை பெற்று ரிக்கி பான்டிங் சாதனையை சமன் செய்தாா் வாா்னா். ஒருநாள் கிரிக்கெட்டில், பிறந்த நாளில் சதம் விளாசிய 6-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் மிட்செல் மாா்ஷ். அத்தகைய பெருமைக்குள்ளான முதல் ஆஸ்திரேலிய வீரா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.