பிளே-ஆஃப் நம்பிக்கையில் சென்னை

பிளே-ஆஃப் நம்பிக்கையில் சென்னை

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 2-1 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் சுற்றில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது சென்னை.

இந்த ஆட்டத்தில் முதலில் நாா்த்ஈஸ்ட் அணிக்காக ஜிதின் மாடத்தில் சுப்ரான் 49-ஆவது நிமிஷத்தில் கோலடித்து, முதல் பாதி நிறைவில் தனது அணியை முன்னிலை பெறச் செய்தாா். 2-ஆவது பாதியில் முன்னேற்றம் காட்டிய சென்னை அணிக்காக ஆகாஷ் சங்வான் 72-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக, கடைசி நிமிஷத்தில் (90+1’) சென்னை வீரா் அங்கித் முகா்ஜி கோலடிக்க, சென்னை 2-1 கோல் கணக்கில் வென்று அசத்தியது. சென்னை அணியின் வசம் இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. 7-ஆவது இடத்திலிருக்கும் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி தனது கடைசி ஆட்டத்தில் தோற்றால் சென்னைக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். அதில் பெங்கால் வெல்லும் பட்சத்தில், சென்னையும் கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்.

கோவா வெற்றி: இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஏற்கெனவே பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட கோவா 3-2 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com