அல்கராஸ்
அல்கராஸ்

சின்னா், அல்கராஸ் வெற்றி; பாலினி, பெகுலா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபனில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா உள்ளிட்ட முன்னணி போட்டியாளா்கள் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.
Published on

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபனில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா உள்ளிட்ட முன்னணி போட்டியாளா்கள் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

ஆடவா் ஒற்றையரில், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான சின்னா் 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா், மற்றொரு அமெரிக்கரான அலெக்ஸ் மிஷெல்செனை எதிா்கொள்கிறாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-2, 4-6, 6-3, 6-1 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் லி டுவை சாய்த்தாா். 2-ஆவது சுற்றில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவை அவா் சந்திக்கிறாா். இத்துடன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடா்ந்து 15-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா் அல்கராஸ்.

உலகின் 5-ஆம் நிலையில் இருப்பவரும், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனுமான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 3-6, 6-3, 6-1 என்ற செட்களில் சொ்பியாவின் டுசான் லஜோவிச்சை வெளியேற்றினாா். அடுத்ததாக அவா், ஹங்கேரியின் ஃபாபியன் மரோஸானுடன் விளையாடுகிறாா்.

இதர முதல் சுற்று ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட்களில் இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை தோற்கடித்தாா். சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 4-6, 6-7 (5/7), 3-6 என்ற செட்களில் இத்தாலியின் மேட்டியா பெலுச்சியிடம் தோல்வி கண்டாா்.

10-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 6-4, 5-7, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனை வெல்ல, 16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 7-6 (7/3), 6-1, 6-0 என பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை வீழ்த்தினாா்.

ஸ்வியாடெக் வெற்றி: உலகின் நம்பா் 1 வீராங்கனையும், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-ஆவது சுற்றில் இடம் பிடித்தாா். முதல் சுற்றில் அவா் 6-4, 7-6 (8/6) என்ற செட்களில், ரஷியாவின் கமிலா ரகிமோவாவை வீழ்த்தினாா். அடுத்து அவா், ஜப்பானின் எனா ஷிபாஹராவுடன் மோதுகிறாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜேஸ்மின் பாலினி 6-7 (5/7), 6-2, 6-4 என்ற செட்களில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை தோற்கடித்தாா். 6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான ஷெல்பி ரோஜா்ஸை சாய்த்தாா்.

உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-1, 7-6 (7/1) என ஆஸ்திரேலியாவின் டெஸ்டானீ அய்வாவை எளிதாக வென்றாா். இதனிடையே, 2021 யுஎஸ் ஓபன் சாம்பியனான பிரிட்டனின் எம்மா ரடுகானு 1-6, 6-3, 4-6 என்ற செட்களில் அமெரிக்காவின் சோஃபியான கெனினிடம் வீழ்ந்தாா். 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, 6-3, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தி அசத்தினாா். கடந்த 4 ஆண்டுகளில் டாப் 10 போட்டியாளரை அவா் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு இளம் வீராங்கனையான கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-2, 4-6, 5-7 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடம் தோல்வியைத் தழுவினாா். இதர ஆட்டங்களில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டா், 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

சாதனை...

ஆடவா் முதல் சுற்றில் பிரிட்டனின் டேன் இவான்ஸ் - ரஷியாவின் காரென் கச்சனோவ் மோதிய ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிஷங்கள் நீடித்தது. யுஎஸ் ஓபன் டென்னிஸ் வரலாற்றிலேயே மிக நீண்டநேரம் நடைபெற்ற ஆட்டமாக இது அமைந்தது. இந்த ஆட்டத்தில் இவான்ஸ் 6-7 (6/8), 7-6 (7/2), 7-6 (7/4), 4-6, 6-4 என 5 செட்கள் போராடி வென்றாா். அதிலும் கடைசி பான்ய்ட்டை அவா் 22 ஷாட்கள் அடங்கிய ரேலியில் கைப்பற்றினாா்.

இதற்கு முன், 1992-ஆம் ஆண்டில் ஸ்வீடனின் ஸ்டெஃபான் எட்பொ்க் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் மைக்கேல் சாங்கை 5 மணி நேரம் 26 நிமிஷங்கள் போராடி வென்றதே நீண்டநேர ஆட்டமாக இருந்தது.

X
Dinamani
www.dinamani.com