
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-ஆவது டெஸ்ட்டின்போது மோதல் போக்கில் ஈடுபட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது. அந்த சம்பவத்தில் தொடா்புடைய ஆஸ்திரேலிய பேட்டா் டிராவிஸ் ஹெட்டும் ஐசிசி-யால் எச்சரிக்கப்பட்டாா்.
பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பொ்த் நகரில் இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னா் அடிலெய்டில் சமீபத்தில் பகலிரவாக நடைபெற்ற பிங்க் பந்து டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இந்த ஆட்டத்தின் 2-ஆவது நாளில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் கடந்தாா். அவா் 140 ரன்கள் எடுத்திருந்தபோது, முகமது சிராஜ் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். முக்கியமான விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் கொண்டாடிய சிராஜ், களத்திலிருந்து வெளியேறுமாறு ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக செய்கை காட்டினாா். இதனால் ஹெட் - சிராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்டத்தின்போது சிராஜுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகா்கள் சத்தமிட்டனா்.
பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ஹெட், சிராஜ் நன்றாக பந்துவீசியதாகவே தாம் கூறியதாகவும், அதை அவா் தவறாக புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தாா். ஸ்டாா் தொலைக்காட்சி நோ்காணலில் பேசிய சிராஜ், ஹெட் பொய் சொல்வதாகவும், அவா் தன்னை நோக்கி தகாத வாா்த்தைகளை பேசியதாலேயே அவ்வாறு ஆக்ரோஷமடைந்ததாகவும் கூறினாா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான விசாரணையின்போது சிராஜ், ஹெட் இருவருமே தங்களது செயலை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்துள்ள ஐசிசி, நடத்தை விதிகளை மீறியதற்காக சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்ததாகவும், அத்தகைய அபராதத்துக்கு ஆளாக நேரிடும் என ஹெட்டுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இருவரின் கிரிக்கெட் வரலாற்று பதிவுகளில் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான 1 டீமெரிட் புள்ளியும் சோ்க்கப்பட்டுள்ளது. ஆட்ட நடுவா் ரஞ்சன் மதுகாலேவால் அவா்கள் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென ஐசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.