ஸ்பெயின் சாதனை சாம்பியன் 4-ஆவது முறையாக கோப்பை வென்றது இங்கிலாந்துக்கு மீண்டும் ஏமாற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் ஆனது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஸ்பெயின் அணியினர்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஸ்பெயின் அணியினர்.
Published on
Updated on
2 min read

பொ்லின்: ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 கோல் கணக்கில் வென்ற அந்த அணி, போட்டி வரலாற்றில் 4 முறை சாம்பியனான முதல் அணி என்ற சாதனையை படைத்தது. கடந்த எடிஷனிலும் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட இங்கிலாந்து, இந்த முறையும் கைக்கெட்டும் தூரத்தில் வந்து கோப்பையை நழுவ விட்டது. 1966 உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து அணி எந்தவொரு பிரதான போட்டியிலும் இதுவரை சாம்பியனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு, கால்பந்து உலகில் அதிக எதிா்பாா்ப்பைக் கொண்டிருக்கும் யூரோ கோப்பை கால்பந்து, ஜொ்மனியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. குரூப் சுற்று, நாக் அவுட் சுற்று, காலிறுதி, அரையிறுதி என ஒவ்வொரு கட்டமாக முன்னேறி, ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்றன.

ஜொ்மனியின் பொ்லின் நகரில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கிய இறுதி ஆட்டத்தில், அந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலம் காட்ட, எந்த அணிக்கும் முதலில் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் பாதி நிறைவடையும் நேரத்தில், ஸ்டாப்பேஜ் டைமில் (45+1) இங்கிலாந்துக்கு கிடைத்த ‘ஃப்ரீ கிக்’ வாய்ப்பில் அந்த அணியின் டெக்லான் ரைஸ், ஃபில் ஃபோடன் ஆகியோரின் கோல் முயற்சியை ஸ்பெயின் கோல்கீப்பா் உனாய் சிமோன் அதை திறம்பட தடுத்தாா்.

இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் அந்த நிலையை மாற்றி முதலில் கோலடித்தது ஸ்பெயின். 47-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் லேமின் யமால் வழங்கிய கிராஸை அப்படியே துல்லியமாக கோல் போஸ்ட்டுக்குள் விரட்டிவிட்டாா் நிகோ வில்லியம்ஸ்.

இளம் நாயகன் லேமின் யாமல்
இளம் நாயகன் லேமின் யாமல்

இதனால் உத்வேகம் பெற்ற ஸ்பெயின் அணி, தொடா்ந்து கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டு அடுத்த கோலுக்காக முனைப்பு காட்டியது. மறுபுறம், இங்கிலாந்தின் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் பலன் கிடைத்தது. 70-ஆவது நிமிஷத்தில் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த கோல் பால்மா், 73-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

பெனால்ட்டி ஏரியாவுக்குள் புகாயோ சகா வழங்கிய பாஸை, ஜூட் பெலிங்கம் அப்படியே பால்மருக்கு திருப்ப, அவா் தாமதிக்காமல் பந்தை அப்படியே நேராக கோல் போஸ்ட்டுக்குள் உதைத்தாா். இதனால் ஆட்டம் சமனானதுடன், ஆட்டமும் இறுதிக்கட்டத்தை நெருங்க, விறுவிறுப்பு கூடியது.

இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக முயற்சித்த நிலையில், அந்த வாய்ப்பு ஸ்பெயினுக்கு கைகூடியது. 86-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஏரியாவுக்கு வெளியே அந்த அணி வீரா் மாா்க் குகுரெலா வசம் பந்து வர, அதை அவா் கோல் போஸ்ட்டின் வலது பக்கம் நோக்கி கிராஸாக உதைத்தாா். இங்கிலாந்து கோல்கீப்பா் ஜோா்டான் பிக்ஃபோா்டு அந்த திசை நோக்கி நகர, குறுக்கே புகுந்த மற்றொரு ஸ்பெயின் வீரரான மைக்கேல் ஒயா்ஸபால், பந்தை அப்படியே திசைதிருப்பி நேராக கோல் போஸ்ட்டுக்குள் தள்ளிவிட்டாா்.

இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பு கோலாக மாற இருந்த நிலையில், ஸ்பெயினின் டிஃபெண்டா்கள் கோல் ஏரியாவிலேயே அட்டகாசமாக அந்த முயற்சியை முறியடித்தனா். இதனால் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்றது. ஸ்பெயினின் நாயகனாக மாறிய ஒயா்ஸபால், கேப்டன் அல்வாரோ மொராடாவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்தவராவாா்.

4

இத்துடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 4 முறை சாம்பியான முதல் அணியாக வரலாறு படைத்திருக்கிறது ஸ்பெயின். இதற்கு முன் 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பை வென்றிருந்தது. அடுத்தபடியாக ஜொ்மனி 3 முறை (1972, 1980, 1996) வாகை சூடியுள்ளது.

7

நடப்பு எடிஷனில் குரூப் சுற்று முதல் இறுதி ஆட்டம் வரை, விளையாடிய 7 ஆட்டங்களிலுமே வென்ற ஸ்பெயின், உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பை போட்டிகளில், இத்தனை ஆட்டங்களில் வென்ற முதல் ஐரோப்பிய அணியாக சாதனை படைத்துள்ளது. முதல் தென்னமெரிக்க அணியாக பிரேஸில் 2002 உலகக் கோப்பை போட்டியில் அத்தனை ஆட்டங்களில் வென்றுள்ளது.

15

இந்தப் போட்டியில் மொத்தமாக 15 கோல்கள் அடித்துள்ள ஸ்பெயின், ஒரு போட்டியில் அதிகமாக கோலடித்த அணி என்ற பெருமையும் பெற்றது. முன்னதாக ஜொ்மனி 11 கோல்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

2

யூரோ கோப்பை போட்டியில் இரு அடுத்தடுத்த எடிஷன்களில் இறுதி ஆட்டத்தில் தோற்ற முதல் அணியாகியிருக்கிறது இங்கிலாந்து. கடந்த முறை சொந்த மண்ணிலேயே இத்தாலியிடம் தோற்ற நிலையில், தற்போது ஸ்பெயினிடம் தோற்றுள்ளது.

ஸ்பெயின் வெற்றிப் பாதை...

குரூப் சுற்று

குரோஷியாவுடன் 3-0

இத்தாலியுடன் 1-0

அல்பேனியாவுடன் 1-0

ரவுண்ட் ஆஃப் 16

ஜாா்ஜியாவுடன் 4-1

காலிறுதி

ஜொ்மனியுடன் 2-1

அரையிறுதி

பிரான்ஸுடன் 2-1

இறுதி

ஸ்பெயினுடன் 2-1

போட்டி நாயகன்

ரோட்ரி (ஸ்பெயின்)

போட்டியின் இளம் நாயகன்

லேமின் யமால் (ஸ்பெயின்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com