
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து இன்று(ஜூலை 27) காலை தற்கொலை செய்து கொண்டவர் 23 வயது இளம் கிரிக்கெட் வீரர் எனத் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பியபோது, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து யாரோ ஒருவர் குதிப்பதை பார்த்ததும், அங்குள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சாமுவேல் ராஜ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாமுவேல் ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: சாமுவேல் ராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் யாருக்கும் எந்த ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மாநில அணியில் இடம்பிடிக்காததால் சாமுவேல்ராஜ் கடந்த சில நாள்களாக கவலையில் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அதனால், சாமுவேல் ராஜின் இந்த விபரீத முடிவுக்கு அவர் டிஎன்பிஎல் அணியில் இடம்பெறாதது காரணமாக இருக்குமா என சந்தேகிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ பட்டதாரியான சாமுவேல் ராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புச்சி பாபு தொடரின் கடந்த ஆண்டு விளையாடியுள்ளார். பிசிசிஐ ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான தொடரில் தெற்கு மண்டல அணியை சாமுவேல் ராஜ் வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சாமுவேல் திறமைவாய்ந்த ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என அவரது நண்பர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சாமுவேல் ராஜின் மரணம் கிரிக்கெட்டை நேசித்து விளையாடும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாமுவேல் ராஜின் இறப்புக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பரங்கிமலை காவல் துறை சாமுல்வேல் ராஜின் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.