
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 12 ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 282 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முன்வரிசை ஆட்டக்காரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இங்கிலாந்து அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இன்றையப் போட்டியில் 87 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார் ஜோ ரூட். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரராகவும் அவர் உள்ளார். இதுவரை 143* டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 12,027 ரன்கள் குவித்துள்ளார்.
12,472 ரன்களுடன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக அலஸ்டர் குக் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.