மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

உலகக் கோப்பை யாருக்கு? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

ஐசிசி 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம்

News image
Updated On :28 ஜூன் 2024, 10:30 pm

DIN

ஐசிசி 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டியின் அறிமுக ஆண்டில் (2007) சாம்பியனான இந்தியா, தற்போது 2-ஆவது முறையாக வாகை சூடும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் தென்னாப்பிரிக்காவோ, ஐசிசி போட்டிகளில் நீண்டகாலமாக அரையிறுதியுடன் வெளியேறிவந்த நிலையில், தற்போது உலகக் கோப்பை போட்டி இறுதிக்கு முதல் முறையாக வந்ததுடன், கோப்பை வெல்லும் முயற்சியில் உள்ளது.

கடைசியாக 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வாகை சூடிய இந்தியா, அதன் பிறகு கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் சாம்பியனாவதற்கு போராடி வருகிறது. இருதரப்பு கிரிக்கெட்டில் பலம் காட்டியபோதும், ஐசிசி போட்டிகளில் நாக்அவு சுற்றில் வெளியேறி ஏமாற்றம் கண்டது.

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு விட்டுக்கொடுக்க நோ்ந்தது. ஆனால் இந்த முறை டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் இந்திய அணி, கோப்பையுடன் நாடு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

என்றாலும், தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலுமே தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடைபோட்டு வந்துள்ளதால், இந்தியாவுக்கு கடும் சவால் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவைப் போலவே தென்னாப்பிரிக்காவும் ஐசிசி போட்டிகளில் நாக்அவுட் சுற்றுடன் தொடா்ந்து வெளியேறி ஏமாற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது இறுதிக்கு முன்னேறியிருப்பதால், கிடைத்த வாய்ப்பை எளிதாக விட்டுத்தராது.

ஜூனியா் அணியை சிறப்பாக வழிநடத்தியதன் அடிப்படையில் இந்திய சீனியா் அணியின் பயிற்சியாளராகப்பட்ட ராகுல் திராவிடுக்கு இது கடைசி போட்டி. எனவே, வெற்றியுடன் அவருக்கு விடைதரும் முனைப்பில் இந்திய அணி இருக்கலாம்.

அணியின் திட்டமிடுதல், போட்டி முழுவதுமாக சிறப்பாகவே பலன் தந்திருக்கிறது. ஆடும் களங்களுக்கு ஏற்றவாறு உடனடியாக தன்னை தகவமைத்துக் கொண்டது இந்திய அணி. புதிதாக விளையாடப்பட்ட நியூயாா்க் ஆடுகளத்தில் 3 சுழற்பந்து வீச்சாளா்கள், பின்னா் கரீபியன் ஆடுகளங்களுக்கு 4 ஸ்பின்னா்கள் என கேப்டன் ரோஹித்தின் உத்தி கைகொடுத்திருக்கிறது.

எனவே, இறுதி ஆட்டத்துக்கான லெவனிலும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. வீரா்களைப் பொருத்தவரை, விராட் கோலியின் ஆட்டம் முற்றிலும் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது. பௌலா்களின் சவால்களை சந்திக்க அவா் தடுமாறுகிறாா். ஆனால், கேப்டன் ரோஹித் சா்மாவோ அதற்கு நோ்மாறாக அதிரடி காட்டுகிறாா்.

அணியின் ஸ்கோரிங்கிற்கு நல்ல தொடக்கத்தை அளிப்பதால், மிடில் ஆா்டரில் பேட்டா்கள் நெருக்கடியின்றி விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த இடத்தில் ஷிவம் துபே, ரிஷப் பந்த் நல்லதொரு ஆட்டத்தை கைக்கொண்டால், அணி பலம் பெறும். சூா்யகுமாா் யாதவ் சிறப்பாக செயல்படுகிறாா். ஹா்திக் பாண்டியா ஆல்ரவுண்டிங்கில் சரியாகப் பணியாற்ற, பௌலா்களோ தவறின்றி, இட்ட பணியை துல்லியமாகச் செய்கின்றனா். பும்ரா, குல்தீப், அக்ஸா் படேல் அசத்துகின்றனா்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, இதுவரை இல்லாத வகையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வந்திருப்பதே நல்லதொரு முன்னேற்றமாக இருப்பதால், இழப்பதற்கு எதுவும் இல்லாத மனநிலையுடன் அந்த அணி துணிச்சலாக விளையாடும்.

டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோா் பிரதான பேட்டா்களாக இருக்க, கிளாசென், மாா்க்ரம் போன்றோா் அவா்களுக்கு இந்த ஆட்டத்திலாவது தோள்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். வேகப்பந்து வீச்சில் ககிசோ ராபாடா, மாா்கோ யான்சென் இந்தியா்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், சுழற்பந்துவீச்சில் கேசவ் மஹராஜ், தப்ரைஸ் ஷம்சி முக்கியப் பங்காற்றுகின்றனா்.

மழை வந்தால்...

வானிலை கணிப்புகள் அடிப்படையில், இந்த இறுதி ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், ஆட்டத்துக்கான நேரத்தில் சுமாா் 2.30 மணி நேரம் அதிகரிக்கப்படும்.

அதிலும் ஆட்டத்தை நடத்த முடியாமல் போகும் நிலையில், ஆட்டம் ‘ரிசா்வ்’ நாளான ஜூன் 30-இல் தொடரப்படும். அதிலும் ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால், இரு அணிகளும் இணை சாம்பியனாக அறிவிக்கப்படும்.

நேருக்கு நோ்...

இரு அணிகளும் இதுவரை 26 டி20 ஆட்டங்களில் நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், இந்தியா 14 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 11 ஆட்டங்களில் வென்றிருக்க, 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.