ரஞ்சி அரையிறுதி: சதம் விளாசிய ஷர்துல் தாக்குர்; வலுவான நிலையில் மும்பை!

ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஷர்துல் தாக்குரின் அதிரடியான சதத்தினால் மும்பை அணி வலுவான நிலையில் உள்ளது.
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஷர்துல் தாக்குர்
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஷர்துல் தாக்குர்

ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஷர்துல் தாக்குரின் அதிரடியான சதத்தினால் மும்பை அணி வலுவான நிலையில் உள்ளது.

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (மார்ச் 2) தொடங்கின. முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் விளையாடி வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. மும்பை அணியின் அபார பந்துவீச்சில் தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷர்துல் தாக்குர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளையும், மோஹித் அவஸ்தி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஷர்துல் தாக்குர்
ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா நீல் வாக்னர்?

இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்தது. முஷீர் கான் 24 ரன்களுடனும், மோஹித் அவஸ்தி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழ்நாட்டைக் காட்டிலும் மும்பை அணி 101 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மோஹித் அஸ்வதி 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே (19 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (3 ரன்கள்), ஹர்திக் தமோர் (35 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். முஷீர் கான் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்குர் தனது அதிரடியான பேட்டிங்கால் அணியை சரிவிலிருந்து மீட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவருடன் மறுமுனையில் விளையாடிய தனுஷ் கோட்டியான் அரைசதம் கடந்து அசத்தினார்.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஷர்துல் தாக்குர்
இவர் ஓய்வு பெறும்போது கேப்டன் பதவியை விட்டுவிடுவேன்: பாட் கம்மின்ஸ்

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது. தனுஷ் கோட்டியான் 74 ரன்களுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மும்பை அணி தமிழ்நாட்டைக் காட்டிலும் 207 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com